திணறடிக்கும் புகைமூட்டம்

திணறடிக்கும் புகைமூட்டம்

2 mins read
79e6f66b-e4ad-4bc6-9627-788aba0f0fe6
விவோசிட்டி பகுதியில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் எடுக்கப்பட்ட படம் இது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் நேற்று (செப்டம்பர் 22) ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி அனைத்து வட்டாரங்களிலும் 24 மணி நேர காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு 100ஐ தாண்டியிருந்தது.

ஆக அதிகமாக தெற்குப் பகுதியில் அந்த அளவு 121ஆக இருந்தது. வடக்குப் பகுதியில் ஆகக் குறைவான அளவாக தூய்மைக்கேட்டுக் குறியீடு 107ஆகப் பதிவாகி இருந்தது. புகைமூட்டம் காரணமாக சிங்கப்பூருக்கும் மலேசியாவின் ஈப்போவுக்கும் இடையிலான 6 விமானச் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 'ஏர்ஏஷியா', 'ஃபிளைஸ்கூட்' ஆகிய நிறுவனங்களின் இந்த விமானச் சேவைகள் ரத்தானதால் 747 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

தென்கிழக்கு ஆசியாவின் மலேசியாவும் இந்தோனீசியாவும் புகைமூட்டத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மலேசியாவின் ஜோகூர், கெடா, மலாக்கா, பாஹாங், திரங்கானு உட்பட 38 இடங்களில் காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு சுகாதாரமற்ற நிலையை எட்டியிருந்தது. அதற்கு முந்தைய நாள் 18 இடங்களில் மட்டுமே இந்த நிலை இருந்தது. கோலாலம்பூரில் காற்றின் தரம் சுகாதாரமற்ற நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.

சரவாக்கின் ஸ்ரீ அம்மானில் நேற்று மதிய வேளையில் காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு 202ஐ தாண்டியது.

கோலா லங்காட், கிள்ளான் மாவட்டங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு நேற்று 200ஐ தாண்டியதால் இன்று அங்குள்ள 57 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 68,025 மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று சிலாங்கூர் கல்வித் துறை தெரிவித்தது.