500 பேர் கலந்துகொண்ட மெதுநடை ஒட்டத்தை நேற்றுக் காலை 7.30 மணியளவில் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் தொடங்கி வைத்தார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ.
மெதுநடை ஓட்டம் ரிவர்வேலி ரோடு, சிங்கப்பூர் ஆற்றங்கரை வழியாகச் சென்று மீண்டும் தேங் ரோட்டை வந்தடைந்தது. மெதுநடை ஒட்டத்தை சுவா சூ காங் தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு கல்லூரியின் உடற்கல்வி விரிவுரையாளர் எஸ் ராமசாமி வழிநடத்தினார்.
செட்டியார் கோயில் குழுமத்தின் மேலாண்மைக் குழு தலைவர் திரு ராம.முத்தையா தமது வரவேற்புரையில், பல இனச் சமுதாயத்திற்கு செட்டியார் கோயில் குழுமம் அறப்பணிகள் செய்து வருவதைச் சுட்டினார். 2000ஆம் ஆண்டு முதல் செட்டியார் கோயில் குழுமம் ஏற்பாடு செய்துவரும் இந்த சமூக நிகழ்ச்சியில் தொடர்ந்து பல இன, இன சமயத்தினர் பங்கேற்பது உற்சாகமளிக்கிறது என்றார்.
உதவி தேவைப்படும் பிற தொண்டு நிறுவனங்களுக்கும் செட்டியார் கோயில் குழுமம் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகிறது என்றும் இந்த ஆண்டு மட்டும் அக்குழுமம் 33 அமைப்புகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது என்றும் திரு முத்தையா சொன்னார்.
நேற்றைய நிகழ்ச்சியில் எட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இயந்திர சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
இயந்திர சக்கர நாற்காலிகளைப் பெற்றுக்கொண்டவர்கள், "இந்த இயந்திர சக்கர நாற்காலி கிடைப்பதற்கு முன், வெளியில் செல்வதற்கு வேறொருவரின் உதவியை நாடவேண்டி இருந்தது. தற்சமயம் இந்தச் சக்கர நாற்காலி கிடைத்த பிறகு அடுத்தவரின் துணையின்றி வெளியில் சென்று வர உதவியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு இயந்திர சக்கர நாற்காலியை வழங் கியதற்கு நன்றி தெரிவிக்கிறோம்," என்றும் கூறினார்கள்.
மெதுநடை ஒட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அன்பளிப்புப் பைகள், டி-சட்டைகள் வழங்கப்பட்ட துடன் அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகளும் கிடைத்தன. இந்த நிகழ்ச்சிக்கு செட்டியார் கோயில் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது.

