நிதித் தொழில்நுட்பத்தால் பாரம்பரிய நாணயமாற்று முதலாளிகள் கவலை

நிதித் தொழில்நுட்பத்தால் பாரம்பரிய நாணயமாற்று முதலாளிகள் கவலை

2 mins read
a7cd5f1b-936f-446b-81d2-cf4c41e3e8ee
ராஃபிள்ஸ் பிளேசில் குடும்பத் தொழிலாக அலிஃபான் ஏஜென்சியை நடத்தி வரும் திரு வி.எஸ். தாஜ்தீன். -

நாணயமாற்று நிறுவன ஊழியர்கள் தங்கள் கூடத்துக்குள் பணத்தாள்களை எண்ணுவது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. ஆனால் இது விரைவில் மாறப் போகிறது என்பது தான் உண்மை. நிதித் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு நாணய மாற்று தொழிலிலும் புதிய நிறுவனங்கள் காலடி எடுத்து வைத்து, வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளை வழங்கி வருவது பாரம்பரிய நாணயமாற்று முதலாளிகளுக்குக் கவலை அளித்துள்ளது.

"இது தோல்வியை நோக்கிச் செல்லும் ஒரு யுத்தம் போன்றது. இந்தச் சவாலில் பாரம்பரிய நாணயமாற்று நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன," என்றார் சிங்கப்பூர் நாணயமாற்று நிறுவனங்கள் சங்கத்தின் முதலாம் உதவித் தலைவர் திரு பரகத் அலி.

இணையம் மூலம் செயல்படும் புதிய தொழில்நுட்ப நாணயமாற்று நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று பணத்தை விநியோகம் செய்கின்றன. அதற்கு அவை கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. பாரம்பரிய நாணயமாற்று நிறுவனங்களுக்குச் சென்று பணத்தை மாற்றிக்கொள்ள வரிசை பிடித்து நிற்கும் போக்குக்குப் பதிலாக வாடிக்கையாளர்கள் அதிக வசதியுள்ள புதிய முறையையே நாடுகிறார்கள்.

"எங்கள் உறுப்பினர்களில் பலர் நாணயமாற்று வர்த்தகத்தைத் தொடர சிரமப்படுகின்றனர்," என்றார் ஹை ஸ்திரீட் சென்டரில் உள்ள அரமெக்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான திரு பரகத் அலி.

தற்போது தனது சங்கத்தின் உறுப்பினராக உள்ள 220 நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதியாகக் குறையும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார் திரு அலி. ராஃபிள்ஸ் பிளேசில் குடும்பத் தொழிலாக அலிஃபான் ஏஜென்சியை நடத்தி வரும் திரு வி.எஸ். தாஜ்தீன், "பத்து ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு 100 மலேசிய ரிங்கிட்டுக்கு $1லிருந்து $2 வரை லாபம் கிடைக்கும். ஆனால் இப்போது 1,000 ரிங்கிட்டுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் $1 கிடைக்கும்," என்றார்.

அலிஃபான் நிறுவனம் நிதித் தொழில்நுட்ப உத்தியைப் பயன்படுத்தி, நாணய மாற்று விகிதங்களை இணையத்தில் பதிவேற்றலாம் எனும் யோசனையைப் பரிசீலிக்கிறது. முன்னைய காலத்தைப் போல நாணய மாற்றுக் கட்டணங்களை நம்பிக் காலம் தள்ள முடியாது என்கிறார் திரு தாஜ்தீன்.