பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சிங்கப்பூரின் அரசியல் கட்சிகள் தங்களை எப்படி தயார்ப்படுத்தி வருகின்றன என்று தி சண்டே டைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. சுமுகமான தலைமைத்துவ மாற்றம் என்பது ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) தனித்தன்மையாக இருந்து வந்துள்ளது. அதையே அடுத்த பொதுத் தேர்தலிலும் அது செயல்படுத்தும். இம்முறை சிங்கப்பூரை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும் பொறுப்பை ஏற்றுள்ள நான்காம் தலைமுறைத் தலைவர்களுக்கு வாக்காளர்களிடமிருந்து நல்ல ஆதரவைத் திரட்டுவது அரசாங்கத்தின் சவாலாக இருக்கும்.
வீடமைப்பு, வாழ்க்கைச் செலவினம், வேலைகள் போன்ற வழக்கமான அன்றாட அக்கறைகளுடன், நான்காம் தலைமுறைத் தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பது மசெகவின் முக்கிய அணுகுமுறையாகத் திகழும். மசெகவின் மத்திய செயற்குழுவில் மாற்றங்கள் கொண்டு வரப் பட்டதும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதும் நான்காம் தலைமுறைத் தலைவர்கள்தான் அரசாங்கத்தின் அடுத்த முதுகெலும்பாக இருப்பார்கள் என்று மக்களுக்கு எடுத்துரைத்தாலும், அடுத்த பொதுத் தேர்தலுக்குள் அவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார்களா என்பது அரசியல் கவனிப்பாளர்களின் கேள்வியாக உள்ளது என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரு மான யூஜின் டான். "பொதுத் தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால், நான்காம் தலைமுறைத் தலைவர்கள், வாக்காளர்கள் தங்களை நன்கு அறிந்துகொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் பாடுபட வேண்டும். மேலும் அவர்களின் நம்பிக்கையை முக்கியமாகப் பெற வேண்டும்," என்று மேலும் கூறினார் பேராசிரியர் டான். "சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் லீ குவான் இயூவும் அடுத்த பிரதமரான ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் இளம் வயதிலேயே அரசியலில் புகுந்து, கட்சியிலும் அரசாங்கத்திலும் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். "அவர்கள் ஒரு பொதுத் தேர்த லில் கட்சியை வழிநடத்தும்போது அவர்கள் வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாகி விட்டனர். அதேபோல்தான், பிரதமர் லீ சியன் லூங், 1990ஆம் ஆண்டி லிருந்து 14 ஆண்டுகள் துணைப் பிரதமராகப் பணியாற்றியவுடன் 2004ல் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். "திரு கோ ஐந்து ஆண்டுகள் துணைப் பிரதமராக இருந்துள்ளார். ஒப்புநோக்க, கடந்த ஏப்ரல் மாதத் தில் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்ட திரு ஹெங் சுவீ கியட், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரு லீயிடமிருந்து பிரதமர் பொறுப்பை ஏற்கக்கூடும்," என்றார் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஸுல்கிஃப்லி பஹாருடின்.
பாட்டாளிக் கட்சி சிங்கப்பூரின் பிரதான எதிர்க் கட்சியான பாட்டாளிக் கட்சி ஒரு புதிய இளம் தலைமைச் செயலா ளரின் வழிகாட்டுதலில் பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. 43 வயதான திரு பிரித்தம் சிங் 18 மாதங்களுக்கு முன் கட்சியின் பழுத்த அனுபவசாலியான திரு லோ தியா கியாங்கிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு வரும் பொதுத் தேர்தலில் இரு பெரும் சவால்கள் உள்ளன. ஒன்று, பாட்டாளிக் கட்சியின் கோட்டையாக விளங்கும் அல் ஜுனிட் குழுத் தொகுதியைத் தக்க வைத்துக்கொள்வது. கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி 50.95% எனும் மிக குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அதை தக்க வைத்துக்கொண்டது. இச்சூழ்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் அக்கட்சி அக்குழுத் தொகுதியில் வெற்றிக் கனியை மீண்டும் சுவைக்க முடி யுமா என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கவலையுடன் பார்க்கின்றனர். அல்ஜுனிட் குழுத் தொகுதியில் 2015ல் வெற்றி பெற்ற அதே குழுவை நிறுத்துவதா அல்லது புதிய குழுவை நிறுத்துவதா என்பதை திரு பிரித்தம் முடிவு செய்ய வேண்டும். இரண்டாவது சவால், பாட்டாளிக் கட்சி எதிர்நோக்கும் அல் ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் தொடர்பான நீதிமன்ற வழக்கு. அதில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகள் என்ற தீர்ப்பாகி, நொடித்துப்போன வர் என்று அறிவிக்கப்பட்டால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு லியோன் பெரேரா, டாக்டர் டேனியல் கோ இருவருடன் மேலும் பலர் கட்சியின் நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்று வதால் அவர்கள் கட்சியின் புதிய வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி பொதுத் தேர்தல் நெருங்கும் வரை அரசியல் கட்சிகள் தாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டி யிடுகின்றன என்பதைத் தெரிவிப்ப தில்லை. ஆனால் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி சற்று மாறுபட்டு, தான் ஐந்து தொகுதிகளில் போட்டி யிட எண்ணியுள்ளதாக அதன் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், கட்சித் தலைவர் டாக்டர் பால் தம்பையா இருவர் மூலம் அறிவித்தது. யூஹுவா, புக்கிட் பாஞ்சாங், புக்கிட் பாத்தோக் தனித்தொகுதிகள் மார்சிலிங்-இயூ டீ, ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதிகள் ஆகியவையே அந்த ஐந்து தொகுதிகள். இக்கட்சியும் புதுமுகங்களைத் தங்கள் தொகுதி சுற்றுலாக்களில் ஈடுபடுத்தி வருவதால், அவர்களும் தேர்தல் களத்தில் இறக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மசெகவின் நாடாளுமன்ற உறுப் பினராக 26 ஆண்டுகள் செயல்பட்டு அக்கட்சியிலிருந்து விலகிய 79 வயது டாக்டர் டான் செங் போக், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைத் தொடங்கி, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அடுத்த மாதமே பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும்கூட தனது கட்சி தனித் தொகுதிகளி லும் குழுத் தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்த தயார்நிலையில் உள்ளது என்று அவர் தி சண்டே டைம்சுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். நிபுணர்கள், முன்னாள் அர சாங்க அதிகாரிகள், முன்னாள் அரசாங்க கல்விமான்கள் போன்றோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.
ஒருங்கிணைந்த எதிர்த்தரப்பு ஆளும் மசெகவை எதிர்த்து ஒருங்கிணைந்த எதிர்த்தரப்பாக தேர்தலில் களம் இறங்கும் வாய்ப்பு குறித்து விவாதிக்க கடந்த ஆண்டு ஏழு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தின. பாட்டாளிக் கட்சி தவிர்த்த அக்கூட்டணிக்கு டாக்டர் டான் செங் போக் தலைவராக இருக்கும் சாத்தியமும் ஆராயப்பட்டது. ஆனால் இதுவரை ஆக்கபூர்வமான முன்னேற்றம் எதுவும் இல்லை. ஆக, சில தொகுதிகளில் முத் தரப்புப் போட்டி இருக்கும் சாத்தியம் இப்போது அதிகரித்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு சிங்கப்பூ ரின் அடுத்த பொதுத் தேர்தலில் ஆக அதிகமாக 11 எதிர்க்கட்சிகள் களம் இறங்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. பொதுத் தேர்தல் 2021 ஏப்ரலுக்குள் நடைபெற வேண்டும்.

