பிள்ளைகள் சிலருக்கு இலவச பாலர் கல்வி: என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ் அறிவிப்பு

பிள்ளைகள் சிலருக்கு இலவச பாலர் கல்வி: என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ் அறிவிப்பு

2 mins read
6bd70338-a4f6-4eb4-813c-4dc2272c5782
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த அதிகமான பிள்ளைகளுக்கு நிதி உதவியும் சமூக ஆதரவும் வழங்கப்படவுள்ளது. அவர்களில் சிலருக்கு இலவச பாலர் கல்வியும் கிடைக்கவிருக்கிறது. சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய பாலர் பள்ளி நடத்துனரான என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ், வசதிவாய்ப்பு குறைவான குடும்பங்களுக்கான ஆதரவை முடுக்கிவிட்டுள்ளது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸின் பிள்ளை ஆதரவுத் திட்டங்களுக்குத் தகுதி பெறுவதற்கான மாதாந்திர குடும்ப வருமான உச்ச வரம்பு $3,500ல் இருந்து $4,500 ஆக உயர்த்தப்படுகிறது. இதன்வழி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000க்கும் மேலான பிள்ளைகள் உதவி பெறுவார்கள். அதோடு, தீவெங்கிலும் அமைந்துள்ள "மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்" நிலையங்களில் சேர்வதற்கும் முன்னுரிமை பெறுவார்கள்.

என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ் நடத்தும் பாலர் பள்ளிகளில் ஒன்று "மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்". கற்றல் ஆதரவு, கூடுதல் நிதி உதவி போன்ற பல்வேறு உதவித் திட்டங்களுக்கு 2020ஆம் ஆண்டில் சுமார் $8.6 மில்லியன் செலவிடப்படும் என பூன் லேயில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) நடந்த நிகழ்ச்சியின்போது என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸின் தலைமை நிர்வாகி சான் டீ செங் அறிவித்தார். அதோடு, 2020 முதல் 2024 வரை, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 500 பிள்ளைகளுக்குப் பாலர் கல்வி இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஓபிசிபி வங்கி $1 மில்லியன் நிதி வழங்குகிறது. அடுத்த ஆண்டு மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் சேரும், மாதாந்திர குடும்ப வருமானம் $4,500 அல்லது அதைவிடக் குறைவாகவுள்ள தொழிற்சங்க உறுப்பினர்களின் பிள்ளைகள், இந்த நிதி உதவிக்குத் தகுதி பெறுவார்கள்.

இத்திட்டத்தின்கீழ், தகுதிபெறும் ஒவ்வொரு பிள்ளையின் "பிள்ளை மேம்பாட்டுக் கணக்கிலும்" $400 போடப்படும். இதற்கு இணையான தொகையை அரசாங்கம் கணக்கில் போடும். இந்தத் தொகை, முதல் ஈராண்டுகாலக் குழந்தைப் பராமரிப்புக்கான கட்டணத்திற்குப் போதுமானது. அதோடு, ஓசிபிசி வங்கி அடுத்த ஆண்டிலிருந்து பெற்றோர்களுக்காக நிதியறிவு பயிலரங்குகளையும் நடத்தவிருக்கிறது.

வங்கிக்கும் என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸுக்கும் இடையிலான பங்காளித்துவ ஒப்பந்தத்தில் ஓசிபிசி வங்கி குழுமத்தின் தலைமை நிர்வாகி திரு சாமுவல் சியனும் திரு சானும் திங்கட்கிழமை கையெழுத்திட்டனர். பிள்ளைகளுக்குத் தங்கள் வாழ்க்கையின் முதல் ஆறு ஆண்டுகளில் கட்டுப்படியாகும் செலவில் தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதி இது என தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் திரு இங் சீ மெங் கூறினார். அவரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்