பயணப் பெட்டிகளைப் பதிவு செய்யும் சாங்கி விமான நிலைய ஊழியருக்குக் குறைந்தது 800 வெள்ளி கையூட்டு கொடுத்த இந்தியக் குடிமகன் கோபால் கிருஷ்ணா ராஜூவுக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பதனீட்டு நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணிபுரிந்த 37 வயது கோபால், பகுதி நேரமாக சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை சென்னைக்கு அனுப்பும் தொழிலையும் செய்து வந்தார்.
கோபாலுக்காக சென்னைக்குத் தங்கம் எடுத்துச் செல்வோரின் பயணப் பெட்டிகளின் எடை வரம்பு மீறினாலும், கூடுதல் கட்டணமின்றி அவற்றை விமான நிலைய ஊழியர் ஹிதேஷ்குமார் சாந்துபாய் பட்டேல் விமானத்தில் ஏற்றிவிடுவார். பத்து மாதங்களுக்கு மேலாகவே கோபாலும் பட்டேலும் இந்தக் குற்றச்செயலைத் தொடர்ந்து செய்து வந்ததாகத் தண்டனையை விதித்த மாவட்ட நீதிபதி ஜான் இங் தெரிவித்தார். சாங்கி விமான நிலையத்தின் நற்பெயரைக் கட்டிக்காப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
விமான நிலைய ஊழல் தொடர்பில் இவ்வாண்டு நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நான்காவது நபர் கோபால். இவர்களில் கோபால் மட்டுமே லஞ்சம் கொடுத்தவர். எஞ்சியவர்கள் கையூட்டு பெற்றதற்காகத் தண்டிக்கப்பட்டனர்.
ஊழல் குற்றவாளிகளுக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் 100,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.


