வில்ட்டன் க்ளோஸிலுள்ள இரண்டு கறுப்பு-வெள்ளை பங்களாக்களில் கடந்த சனிக்கிழமை தீச்சம்பவம் ஏற்பட்டது. எண் 1 மற்றும் 2 வில்ட்டன் க்ளோசில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் பற்றி மாலை 6 மணிக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
ஏழு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமைத் தற்காப்புப் படையினர், நான்கு நீர்க்குழாய்களுடன் தீயை அணைத்தனர். மாலை 6.40 மணிக்கு அந்தத் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயை அணைக்க எட்டு அவசர வாகனங்களும் 22 தீயணைப்பாளர்களும் பயன்படுத்தப்பட்டன.
சம்பவத்தின்போது தீப்பற்றிய வீடுகளுக்குள் இருந்தவர்கள் தக்க சமயத்தில் வெளியே வந்ததால் எவரும் காயமடையவில்லை.
தீப்புகை வெளிவந்து கம்பமாக வளர்ந்து நிற்பதைக் காட்டும் காணொளி ஒன்று ஸ்டாம்ப் செய்தித்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

