சுமார் 13,000 தொண்டூழியர்கள் வடமேற்கு வட்டாரத்தைச் சென்ற ஆண்டு பசுமைமிக்க, தூய்மைமிக்க வட்டாரமாக ஆக்கி இருக்கிறார்கள். வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் நேற்று வெளியிட்ட வருடாந்திர வடமேற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.
இந்த மன்றம், தன்னுடைய சமூகத்திற்குள் மேற்கொண்டுள்ள பசுமைச் செயல்திட்டங்களைக் கண்காணித்து அவற்றை இந்த அறிக்கை அளவிட்டு இருக்கிறது.
சிட்டி ஸ்குவேர் மாலில் சிங்கப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பயிலகத்தில் நேற்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் அந்த அறிக்கையை வெளியிட்டார்.
சுற்றுச்சூழலையும் இயற்கை வளத்தையும் பாதுகாப்பதில் இளையர்கள் தீவிர பங்கெடுப்பதைக் காண தமக்கு ஊக்கம் பிறக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், வார முடிவில் ஹோங் லிம் பார்க்கில் நடந்த பருவநிலைப் பேரணியைப் பெரிதும் பாராட்டினார்.
"பருவநிலை மாற்றம் என்பது நம்முடைய காலத்தில் நாம் எதிர்நோக்கும் பிரம்மாண்டமான சவாலாக இருக்கிறது.
"இந்த பூமி நலமாக இருந்தால்தான் நம்முடைய பிள்ளைகளுக்கு எதிர்காலம் இருக்கும். ஆகையால்தான் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துகிறார்கள். இதில் வியப்பு ஒன்றும் இல்லை," என்று திரு வோங் குறிப்பிட்டார்.
வடகிழக்கு வட்டாரத்தில் சுமார் 10,000 மாணவர்கள் பொருட்களை முறையாக மறுசுழற்சிக்கு விடும் தொழில்நுட்பங்களைக் கற்றுத் தரும் வருடாந்திர செயல்திட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார்கள். பள்ளிக்கூடத்திற்குள் மறுசுழற்சிக் கூடங்களை அமைப்பதிலும் அவர்கள் ஈடுபட்டார்கள்.
இந்தச் செயல்திட்டத்தைச் செம்ப்வேஸ்ட் மற்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவற்றுடன் சேர்ந்து வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் அமல்படுத்தியது.
ஸு சி அறநிறுவனம் என்ற பௌத்த அறப்பணி நிறுவனம், 2011 முதல் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பகுதியில் மறுசுழற்சிக் கூடங்களை நிர்வகித்து நடத்த உதவி வருகிறது.
கழிவுப்பொருட்களை எப்படி எல்லாம் வகைப்படுத்தி பிரிக்கவேண்டும் என்பதை அவற்றின் குடியிருப்பாளர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்கிறார்கள்.
அத்தகைய கூடங்களின் வழியாக இதுவரையில் சுமார் 573,000 கிலோ மறுசுழற்சிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை விற்று கிடைக்கும் தொகை மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
உயிர்க்கொல்லி குப்பைகளைத் தவிர்த்துக்கொள்வது, மறுசுழற்சியை அதிகரிப்பது போன்ற பசுமைத் திட்டங்களின் பேரில் 264 நிறு வனங்கள் மற்றும் சமூக பங்காளிகள் சென்ற ஆண்டில் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்துடன் சேர்ந்து பாடுபட்டு இருக்கிறார்கள்.
சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் செயல் திட்டங்களைக் குடியிருப்பாளர்கள், தொண்டூழியர்கள், பங்காளிகளுடன் சேர்ந்து தொடர்ந்து உருவாக்கப்போவதாக நேற்றைய நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட வடமேற்கு மாவட்ட மேயர் டியோ ஹோ பின் தெரிவித்தார்.

