பாசிர் ரிஸ் விபத்து விசாரணை: வாதாடும் லாரி ஓட்டுநர்

பாசிர் ரிஸ் விபத்து விசாரணை: வாதாடும் லாரி ஓட்டுநர்

2 mins read
4556532b-a97f-4782-8c4d-9ac37d9218a7
வழக்கறிஞர் சியா பூன் டெக்குடன் (இடது) லாரி ஓட்டுநர் டியோ செங் தியோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாசிர் ரிஸ் டிரைவ் 3 மற்றும் பாசிர் ரிஸ் ரைஸ் இரண்டும் சந்திக்கும் இடத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சாலை விபத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரிட்டனைச் சேர்ந்த எரிக் சியூங் ஹோயூ, 35, என்பவர், டியோ செங் தியோங் என்பவர் ஓட்டி வந்த லாரியின் இடதுபக்க கண்ணாடியில் மோதியதை அந்தக் காணொளி காட்டியது.

அப்போது லாரி திடீரென சியூங்கின் பாதையில் வருவது போல் இடதுபுறமாகத் திருப்பப்பட்டது. அதன் காரணமாக எரிக் சைக்கிளில் இருந்து சாலை ஓரமாக இருக்கும் புல் பகுதியில் போய் விழுந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து மூன்றே நாட்களுக்குள் சியூங்கும் டியோவும் கைதுசெய்யப்பட்டார்கள். இதன் தொடர்பான வழக்கு விசாரணையில் இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் எரிக் இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு ஏப்ரல் 12ஆம் தேதி $2,800 அபராதம் விதிக்கப்பட்டது.

இவ்வேளையில், தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளை டியோ மறுத்து வருகிறார்.

நேற்று டியோ தொடர்பான வழக்கில் முதல் நாள் விசாரணை நடந்தது. அப்போது தன் வழக்கறிஞர் மூலம் சாட்சியம் அளித்த டியோ, 58, இரண்டு சைக்கிள் ஓட்டிகளை முந்திச் சென்றபோது டமார் என்று மோதும் சத்தம் கேட்டதாகவும் வலதுபுறம் டாக்சி ஒன்றில் தனது வாகனம் இடித்துவிட்டதாக தான் கருதியதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக தன்னுடைய லாரியை இடதுபுறம் தான் திருப்பியதாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட நிகல் ஹார்பர் என்ற இரண்டாவது சைக்கிளோட்டி அளித்த சாட்சியத்தில், விபத்து நிகழ்ந்ததற்குப் பிறகு டியோ தனது லாரியை சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டதாகக் கூறினார்.

அவரை அணுகியபோது டியோ தன் லாரியின் பக்க கண்ணாடி உடைந்தது பற்றி கோபத்துடன் இருந்ததாகவும் ஹார்பர் தெரிவித்தார். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மருத்துவ வண்டி வந்தது. அதற்கு முன்பே டியோ அந்த இடத்தை விட்டு தன் வாகனத்தை ஓட்டிச் சென்றுவிட்டதாக ஹார்பர் சாட்சியம் அளித்தார்.

வழக்கு விசாரணை தொடர்கிறது.