தீவிரவாதப் போக்குடைய மூன்று இந்தோனீசியப் பணிப்பெண்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத அமைப்பு களுக்கு நிதி வழங்கியது தொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அனின்டியா அஃபியந்தாரி, 33, ரெட்னோ ஹெர்னயாணி, 36, துர்மினி, 31, ஆகிய மூவரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரும் சிங்கப்பூரில் ஆறிலிருந்து 13 ஆண்டுகளாகப் பணிபுரிந்தவர்கள் என உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. 2015ஆம் ஆண்டிலிருந்து தீவிரவாதப் போக்குடைய மொத்தம் 19 வெளிநாட்டுப் பணிப்பெண்களை சிங்கப்பூர் அதிகாரிகள் அடையாளம் கண்டு அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தீவிரவாதப் போக்கு தொடர்பாக வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
விசாரணையின் ஒரு பகுதியாக இன்னொரு பணிப்பெண்ணும் கைது செய்யப்பட்டார். அவர் தீவிரவாதப் போக்குடையவர் அல்ல என்றபோதிலும், மற்ற மூவரும் தீவரவாதக் கொள்கைகளில் ஊறிப்போனவர்கள் என அறிந்தும் போலிசாரிடம் அவர் தெரிவிக்கவில்லை. அவரை இந்தோனீசியாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டதாக அமைச்சு கூறியது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் பற்றிய விவரங்களை இணையம் வாயிலாக கடந்த ஆண்டு படித்து அவர்கள் தெரிந்து கொண்டனர். அதையடுத்து, மூவரும் தீவிரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர். சமூக ஊடகத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான கருத்துப் பகிர்வுத் தளங்களில் சேர்ந்த பிறகு அந்த அமைப்பின் மீது அவர்கள் கொண்டிருந்த கடப்பாடு அதிகரித்தது.
"மூவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக இணையம் மூலம் மிக மும்முரமாக ஆதரவு திரட்டினர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கினர்," என்று உள்துறை அமைச்சு கூறியது.
மூவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பாக இந்தோனீசியாவில் செயல்படும் ஜெமா அன்ஷருத் டௌலா (ஜேஎடி) எனும் பயங்கரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளர்களானார்கள். இந்த அமைப்பு இந்தோனீசியாவால் தடை செய்யப்பட்டுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள், கழுத்துகளைத் துண்டிக்கும் காட்சிகள் ஆகியவை மூவரையும் கவர்ந்ததாக அமைச்சு தெரிவித்தது.
அமான் அப்துரஹ்மான், உஸ்மான் ஹைடர் செஃப் போன்ற இஸ்லாமிய சமய போதகர்களின் தீவிரவாதக் கொள்கைகள் கொண்ட போதனைகளை மூவரும் இணையம் வழியாகக் கேட்டு அவற்றினால் ஈர்க்கப்பட்டதாக உள்துறை அமைச்சு கூறியது. ஜேஏடி அமைப்பின் தலைவராக செயல்பட்ட அமானுக்குக் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தோனீசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த மற்றவர்களை அவர் தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
அண்மையில் இந்தோனீசியாவில் நிகழ்ந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஜேஏடி அமைப்பு காரணமாக இருந்தது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சுரபாயா தற்கொலைத் தாக்குதலும் அவற்றில் அடங்கும்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர சிரியாவுக்கு பயணம் மேற்கொள்ள அனின்டியாவும் ரெட்னோவும் திட்டமிட்டிருந்தனர். தற்கொலைத் தாக்குதல் நடத்த அனின்டியா தயாராக இருந்தார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் வசிக்க ரெட்னோ விரும்பினார். அதுமட்டுமல்லாது, பாலஸ்தீனம், காஷ்மீர் ஆகிய இடங்களில் 'இஸ்லாத்தின் எதிரி'களுடன் போரிடுவது ஒவ்வொரு முஸ்லிம்மின் கடமை என்று அவர் நம்பினார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் பயங்கரவாதம் தொடர்ந்து மிக மோசமான மிரட்டலாக இருந்து வருவதாக உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. இணையத்தின் தீவிரவாதக் கொள்கை
களைப் பரப்பும் கருத்துகள், காணொளிகளைப் பார்க்க வேண்டாம் என அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
சமயம் குறித்து சரியான அங்கீகரிக்கப்பட்ட வழிகளிலிருந்து ஆலோசனை பெற வெளிநாட்டுப் பணிப்பெண்களை அமைச்சு ஊக்குவிக்கிறது.
பயங்கரவாத அமைப்புகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வருவதாக அமைச்சு கூறியது. தற்கொலைத் தாக்குதல் நடத்
துவது, தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்புவது, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பது போன்றவற்றை இத்தகைய பெண்கள் செய்வதாக அமைச்சு கூறியது.
யாராவது சந்தேகப்படும்படி நடந்துகொண்டாலோ அல்லது தீவிரவாதக் கொள்கை உடையவர் என்ற சந்தேகம் எழுந்தாலோ உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிப்பது மிகவும் முக்கியம் என்று உள்துறை அமைச்சு வலியுறுத்தியது.

