'தனிநபர் நடமாட்ட சாதனங்களுக்கு அடியோடு தடை விதிக்கக்கூடாது'

'தனிநபர் நடமாட்ட சாதனங்களுக்கு அடியோடு தடை விதிக்கக்கூடாது'

1 mins read

மின்ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட தனிநபர் நடமாட்ட சாதனங்களுக்கு (பிஎம்டி) அடியோடு தடை விதிக்கக்கூடாது என்று முன்னணி வல்லுநரான டாக்டர் கிம் யங் டே கருத்துரைத்துள்ளார். அவற்றைக் கொண்டு பல அனுகூலங்கள் இருப்பதாகக் கூறிய அவர், பொது நடைபாதைகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் விதிமுறைகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

பிஎம்டிக்களால் ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குரிய கொள்கைகளை வகுக்க பல நாடுகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை எடுக்கும் என்று அனைத்துலகப் போக்குவரத்துக் கருத்தரங்கின் (ஐடிஎஃப்) தலைமைச் செயலாளரான டாக்டர் கிம் சொன்னார். 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 'ஐடிஎஃப்' அமைப்பின் தலைமைப் பொறுப்பு வகித்து வரும் அவர், பிரான்சை சேர்ந்தவர். சிங்கப்பூரில் கடந்த வாரம் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க இங்கு வந்திருந்த அவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டி அளித்தபோது மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.

பிஎம்டி பாதுகாப்பு என்பது உலகளவில் பல நாடுகள் சந்தித்து வரும் பிரச்சினை என்பதைச் சுட்டிய இவர், அவற்றைக் கொண்டு ஏற்படும் அனுகூலங்கள் பற்றிக் குறிப்பிட்டார். பிஎம்டிக்கள் மலிவான விலைவில் கிடைப்பவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்றார் டாக்டர் கிம். "நாம் பயணம் செய்வதற்கு இப்போது பலதரப்பட்ட போக்குவரத்து முறைகள் உள்ளன. அதில் பிஎம்டியும் ஒன்று. இந்நிலையில், பாதசாரிகளின் பாதுகாப்புக்கும் பிஎம்டிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இடையே சமநிலை காணப்பட வேண்டும்," என்றார் அவர்.