ரயில் கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் விண்ணப்பம்

ரயில் கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் விண்ணப்பம்

2 mins read
14972201-c9ef-4218-84b2-0f97906f1e63
எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ட்ரெயின்ஸ் நிறுவனங்கள் ரயில் கட்டணத்தை உயர்த்தக் கோரி விண்ணப்பித்துள்ளன. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரயில் கட்டணத்தை உயர்த்தக் கோரி எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ட்ரெயின்ஸ் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதனால் இவ்வாண்டு இறுதிக்குள் பேருந்து, ரயில் கட்டணங்கள் 7% வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இரு போக்குவரத்து சேவை நிறுவனங்களிடம் இருந்து ரயில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று பொதுப் போக்குவரத்து மன்றம் நேற்று தெரிவித்தது.

போக்குவரத்து அமைச்சால் ஏற்படுத்தப்பட்ட கட்டணக் கண்காணிப்பு அமைப்பே அந்த மன்றம்.

இப்போது பேருந்துகளை அரசாங்கம் குத்தகைக்கு விட்டுள்ளதால் பேருந்துக் கட்டண வருமானம் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் சென்றுவிடும். குறிப்பிட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க சேவை நிறுவனங்கள் ஏலம் கேட்கும். ஏலமெடுக்கும் நிறுவனத்திற்கு அது ஏலத்தில் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

பயணக் கட்டண மறுஆய்வுக்கு உதவும் வகையில் நிலப் போக்குவரத்து ஆணையம் பேருந்துத்துறையின் நிதிநிலை குறித்த தகவல்களைச் சமர்ப்பிக்கும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்தது.

வருடாந்திர கட்டணத் திருத்தம் குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் எனக் கேட்டதற்கு, இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மன்றத்தின் பேச்சாளர் கூறினார்.

இவ்வாண்டிற்கான அனுமதிக்கப்பட்ட அளவான, அதிகபட்சம் 7% என்ற அளவிற்கு முழுமையாகக் கட்டணத்தை உயர்த்தக் கோரி அந்த இரு போக்குவரத்து சேவை நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளதா என்பது தெரியவில்லை.

"ரயில் சேவையின் மேம்பட்ட செயல்திறனுக்கும் நீடித்த செயல்பாட்டிற்கும் ஏற்ற வகையில் கட்டணத்தை 7% உயர்த்துவதை நாங்கள் ஆதரிக்கிறோம்," என்று எஸ்எம்ஆர்டி ட்ரெயின்ஸ் தலைமை நிர்வாகி லீ லிங் வீ கூறினார்.

"2019 நிதியாண்டில், பராமரிப்பு சார்ந்த பணிகளுக்காக ரயில் கட்டண வருவாயில் 71 விழுக்காட்டுத் தொகை செலவிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இந்த விகிதம் 62 விழுக்காடாக இருந்தது. விரிவான அளவில் தீவிர மான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரயில் கட்டண வருவாயைக் காட்டிலும் மொத்த நடைமுறைச் செலவுகள் கூடுதலாக இருக்கின்றன. இப்படியே போனால் தாக்குப்பிடிக்க முடியாது," என்றும் அவர் சொன்னார்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேச்சாளர் டேமி டான் கூறுகையில், "அதிகமான பழுதுபார்ப்பு, பராமரிப்புச் செலவுகளால் ரயில் சேவையை வழங்குவதற்கான செலவு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, ரயில் கட்டண வருவாயைப் பொறுத்தமட்டில், பயணங்களின் எண்ணிக்கை கூடியபோதும் தொடர்ந்து இழப்பையே சந்தித்து வருகிறோம். ஆகையால், பயணக் கட்டணத்தை உயர்த்துவது செலவினங்களைச் சமாளிக்க சற்று உதவும் என நம்பப்படுகிறது," என்று குறிப்பிட்டார்.

7% கட்டணம் உயர்த்தப்பட்டால் பேருந்து, ரயில் கட்டணங்கள் கிட்டத்தட்ட பத்துக் காசு அதிகரிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்