முதியவர்களிடம் $50,000 மோசடி செய்த சமூக ஊழியருக்குச் சிறை

முதியவர்களிடம் $50,000 மோசடி செய்த சமூக ஊழியருக்குச் சிறை

1 mins read
13177461-e539-473b-b56f-6b1aa6679ef7
ஒன்பது முதியவர்களை ஏமாற்றி அவர்களின் பணத்தை அபகரித்த ஜோனி சொங் சியங் சியங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

முதியவர்களிடமிருந்து $50,000க்கும் மேற்பட்ட தொகையை ஏமாற்றியதன் தொடர்பில் முன்னாள் மருத்துவச் சமூக ஊழியருக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

'கிரேஸ் லாட்ஜ்' மருத்துவ இல்லத்தில் பணிபுரிந்த 38 வயது ஜோனி சொங் சியங் சியங் நம்பிக்கை மோசடியின் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். 2017ஆம் ஆண்டு ஜூன் ஒன்று முதல் ஆகஸ்ட் 11 வரை இல்லத்தில் வேலை செய்த சொங், மொத்தம் ஒன்பது முதியவர்களை ஏமாற்றி அவர்களின் பணத்தை அபகரித்தது தெரியவந்தது.

அஞ்சல்களை நிர்வகிப்பதும் இல்லத்திற்கு வரும் காசோலைகளை இல்லவாசிகளின் தகவல் கோப்புகளில் வைப்பதும் சொங்கின் பொறுப்பு.

கிடைத்த காசோலைகளை இல்லவாசிகளின் சார்பில் பணமாகப் பெற்றுக்கொள்ள இல்ல இயக்குநரின் ஒப்புதலைப் பெற்ற சொங், பின்னர் அப்பணத்தைத் தானே வைத்துக்கொள்ள முடிவெடுத்ததாக கூறப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இல்லக் கணக்குவழக்குகளைத் தணிக்கை செய்தபோது, சொங் புரிந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

தன் பராமரிப்பில் இருந்த இரண்டு முதியவர்களின் வங்கி அட்டைகளை செயல்படுத்த உதவுவதாகக் கூறிய சொங், அவர்களின் தனிநபர் அடையாள எண்களைக் குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் வங்கி அட்டைகளைத் தானே வைத்துக்கொண்டு, பல தானியங்கி பணம்பெறும் இயந்திரங்கள்வழி வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தார்.

இரு முதியவர்களின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளையும் சரிபார்த்த மற்றொரு ஊழியர், சந்தேகத்தின் பேரில் போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில், மோசடிவழியாகப் பெற்ற மொத்த தொகையையும் இழப்பீடாகப் பாதிக்கப்பட்டோருக்கு சொங் திரும்பக் கொடுத்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.