பிரதமர் லீ: சிங்கப்பூர் அதன் முழுப் பங்கை ஆற்றும்

பிரதமர் லீ: சிங்கப்பூர் அதன் முழுப் பங்கை ஆற்றும்

2 mins read
9a9e53ad-506b-4d73-946a-0e85da9d93ee
விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் லீ (நடு). படம்: ஏஎஃப்பி -

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க சிங்கப்பூர் அதன் முழுப் பங்கை ஆற்றும் என்று பிரதமர் லீ நேற்று முன்தினம் உறுதியளித்திருந்தார்.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் செயல்திட்டம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய நாட்டு நிறுவன உச்சநிலை மாநாட்டில் அவர் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

அனைத்து நாடுகளையும் பாதித்துப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தன்மை பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு உண்டு.

புதிய நோய்கள், கடுமையான வானிலை நிகழ்வுகள், உணவுப் பற்றாக்குறை, கட்டாய இடமாற்றம் ஏற்படக்கூடும் என்று கூறிய திரு லீ, போர்கள்கூட மூளக்கூடும் என்று குறிப்பிட்டார்.

மின்சார உற்பத்திக்கான காற்று விசையாழிகளைக் கட்ட அதிக நிலம் தேவைப்படுகிறது. இந்த உதாரணத்தைக் கூறிய திரு லீ, அளவில் சிறியதாக இருப்பதுடன் அதிகமாக நகரமயமாகியுள்ள சிங்கப்பூர் மாற்று சக்தி என்று வரும்போது சாதகமற்ற நிலையில் இருப்பதாகச் சொன்னார்.

ஆனால் இந்த நிலையைச் சமாளிப்பதற்காக, இருக்கும் வளங்களைக்கொண்டு புத்தாக்கம் வாய்ந்த தீர்வுகளை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் 80 விழுக்காட்டு கட்டடங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி சேமிப்பு அம்சங்களுடன் பொருத்தப்படும் என்றார். பொதுப் போக்குவரத்து, தனிநடமாட்டப் போக்குவரத்து, பகிர்வுப் போக்குவரத்து என 2040ஆம் ஆண்டுக்குள், உச்ச நேரப் பயணங்களில் 90 விழுக்காடு அமையவேண்டும் என்பதும் ஓர் இலக்காக உள்ளது.

இதற்கிடையே சிங்கப்பூர் பெரும் முயற்சி எடுத்தாலும் பருவநிலை மாற்றத்தைத் தனி ஒரு நாடாக நிறுத்திவிட முடியாது என்றும் இதற்காக மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் நியூ யார்க்கில் நடைபெற்ற இம்மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பருவநிலை மாற்றம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்று சென்ற மாதம் தம் தேசிய தினப் பேரணி உரையில் விடுத்த அதே எச்சரிக்கையை மீண்டும் பிரதமர் லீ மாநாட்டு உரையில் கூறி வலியுறுத்தினார்.

உலகளாவிய நிலையில் ஆகப் பெரிய சவாலாக பருவநிலை மாற்றம் உள்ளதென்று கூறிய பிரதமர் லீ, ஐக்கிய நாட்டு உறுப்பு நாடுகள் தங்களின் முயற்சிகளை இருமடங்காக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு திட்டங்களில் சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

நீடித்த வளர்ச்சிக்காக மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் உலகத் தலைவர்களுக்குப் பங்குண்டு என்று கூறினார் அவர்.

அத்துடன் இத்தகைய பங்காற்றும் முயற்சிகளின் முக்கியத்துவத்தை மக்களிடையே வலியுறுத்தி, நம் எதிர்காலத்தையும் நமக்கு அடுத்து வரும் தலைமுறைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

நியூயார்க் நகருக்கு ஒருவாரப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லீ, பயணத்தின் ஒரு பகுதியாக இம்மாநாட்டில் கலந்துகொண்டார்.