மானபங்கம் செய்த நேப்பாளத் துறவிக்கு ஐந்து மாதச் சிறை

மானபங்கம் செய்த நேப்பாளத் துறவிக்கு ஐந்து மாதச் சிறை

1 mins read

பௌத்த கோவில்களில் வேதங்கள் படிப்பதற்காக அடிக்கடி சிங்கப்பூருக்கு வரும் துறவிக்கு, 28 வயது பெண்ணை மானபங்கம் செய்ததன் தொடர்பில் நேற்று ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வழிபாடு செய்ய தைவானுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நேப்பாளத்தைச் சேர்ந்த தாமாங் டாவா, 42, தம் விசாவைப் புதுப்பிப்பதற்காக சிங்கப்பூருக்கு வந்திருந்தார். ஜூலை 11ஆம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் மதுபானம் அருந்திவிட்டு கேலாங் விடுதி ஒன்றின் அருகே நடந்து சென்ற தாமாங், தற்காலிகக் கடை ஒன்றைப் போட்டிருந்த அப்பெண்ணைப் பார்த்தார்.

தான் விற்கும் பொருட்களைக் காட்டுவதற்காக தாமாங்கை அப்பெண் அருகே அழைத்தார். அப்போது தன்னிடம் பேசிக்கொண்டிருந்த பெண்ணைத் திடீரென்று தாமாங் மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.

தாமாங்கின் கையைத் தட்டிவிட்ட பெண், உடனே அருகே உட்கார்ந்திருந்த ஓர் ஆடவரை உதவி கோரி அழைத்தார். அந்தவழியாக நடந்து சென்ற இன்னொரு ஆடவரும் உதவ வந்தார். இருவரும் தாமாங்கை ஓடிச் சென்று பிடித்தனர். பின்னர் துறவி கைது செய்யப்பட்டு, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தான் செய்த குற்றத்தை எண்ணித் துறவி பெரிதும் வருந்துவதாகக் கூறினார் தற்காப்பு வழக்கறிஞர். அத்துடன் நேபாள தலைமைத் துறவிக்குத் தான் இழைத்த அவமானம் குறித்து தாமாங் தன் செயலுக்காக தன்னையே கடிந்து கொள்வதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

மானபங்கம் செய்ததற்காக தாமாங்குக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அனைத்தும் விதிக்கப்பட்டிருக்கலாம்.