சம்பளப் பிரச்சினை தொடர்பில் பேருந்து ஓட்டுநர்கள் ஐவர், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.பேருந்து ஓட்டுநர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான வேலை ஒப்பந்தத்திற்கு மாறாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நடந்துகொண்டதாக ஓட்டுநர்கள் கூறினர்.
ஓய்வு நாள் இல்லாமல் வாரத்தில் ஏழு நாட்களும் தொடர்ந்து வேலை செய்யுமாறு கூறப்பட்ட
தாகவும் பணிநேரத்தைத் தாண்டி வேலை செய்ததற்கு உரிய சம்பளம் வழங்காமல் இருந்ததாகவும் வழக்குத் தொடுத்த ஓட்டுநர்களில் ஒருவரான திரு சுவா குவோங் மெங் குற்றஞ்சாட்டினார்.
வேலை நியமனச் சட்டத்தின்படி, ஊழியர்கள் தொடர்ந்து 30 மணி நேரம் வேலை செய்தால், அவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க வேண்டும்.
வழக்குத் தொடுத்துள்ள ஓட்டுநர்கள், தங்களுக்கு இழப்பீடும் வழக்குத் தொடுத்ததால் ஏற்பட்ட செலவுக்கான தொகையும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலையாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துக்கு நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் எம்.ரவி கூறினார். தமது கட்சிக்காரர்களில் மூவர் சிங்கப்பூரர்கள், இருவர் மலேசியர்கள் என்று கூறிய திரு ரவி, அவர்கள் எஸ்பிஎஸ் டிரான்சிட்டுக்கு தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகக் குறிப்பிட்டார். எனினும், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர்கள் வெளியேறிவிட்டதாக அவர் சொன்னார்.
தனக்கு நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டதை எஸ்பிஎஸ் டிரான்சிட் நேற்று முன்தினம் உறுதிப்
படுத்தியது. "எங்களது வழக்கறிஞர்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து நாங்கள் வாதிடவுள்ளோம்," என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை எதிர்த்து வாதிட எஸ்பிஎஸ் டிரான்சிட் எண்ணினால், நீதிமன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க அதற்கு ஒரு வாரம் அவகாசம் உள்ளது.

