சட்ட அமைச்சர்: உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீட்டைக் கையாள சட்டங்கள் தேவை

சட்ட அமைச்சர்: உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீட்டைக் கையாள சட்டங்கள் தேவை

2 mins read
2cb9daeb-c11d-455d-9e47-00e3727919ce
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் எஸ் ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த 'வெளிநாட்டுத் தலையீட்டு உத்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்' என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார் சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒரு நாட்டின் அரசியலையும் நிலைத்தன்மையையும் கீழறுப்பதற்கு ராணுவப் படையைவிட இது மிகவும் கொடியது என்று வெளிநாட்டுத் தரப்புகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது பற்றி உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் புதன்கிழமை (செப்டம்பர் 25) கூறினார்.

உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தரப்புகள் தலையிட முற்படும் சம்பவங்கள் வரலாறு முழுவதும் காணப்படுகின்றன. இத்தகைய தலையீட்டில் புரட்சியை உண்டாக்கியுள்ளது இணையம்.

ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசுரிமை உள்ளது. இந்நிலையில், உள்நாட்டு அரசியலிலும் கருத்துகளிலும் தனது செல்வாக்கைப் புகுத்த முனையும் வெளிநாட்டுத் தரப்பினரை எதிர்ப்பதற்குச் சட்டங்கள் வகுக்கப்படுவது அவசியமென சிங்கப்பூர் கருதுவதாக அவர் சொன்னார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் எஸ் ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த 'வெளிநாட்டுத் தலையீட்டு உத்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்' என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசினார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் சொந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்பட விட முடியாது என்றும், அரசாங்கம் தீர்மானிக்கும் நியாயமான, பயன்மிக்க ஒழுங்குமுறைக்கு உட்பட்டு இந்நிறுவனங்கள் செயல்படவேண்டும் என்றும் திரு சண்முகம் கூறினார்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, உள்நாட்டு அரசியலிலும் கருத்துகளிலும் வெளிநாட்டுத் தரப்பினர் தங்களது செல்வாக்கைப் புகுத்த முற்படும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குச் சொந்த சட்டத்திட்டங்கள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

திட்டவட்டமான குறுக்கீடுகளின் மூலம் வெளிநாட்டுத் தலையீட்டைக் கையாளவும், இணையம்வழி விரோதத்தைப் பரப்பும் இயக்கங்களை விரைவாகப் புலனாய்வு செய்யவும் அரசாங்கத்திற்கு இச்சட்டங்கள் அதிகாரமளிக்கும்.

வெளிநாட்டுத் தலையீட்டின் அளவை நிர்ணயிப்பதற்கும், தகுந்த பதில்நடவடிக்கை எடுப்பதற்கும் தேவையான விவரங்களைப் பெறும் அதிகாரமும் அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும் என்றார் அவர்.

வெளிநாட்டுத் தலையீட்டை எதிர்ப்பதற்கான சட்டத்தால் பல்வேறு வகையான மிரட்டல்களைச் சமாளிக்க இயலவேண்டும் என்றார் திரு சண்முகம்.

பணப் புழக்கம், தேர்தல் காலகட்டத்திலும் மற்ற காலங்களிலும் தலையீடு, உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டுத் தரப்பினரின் செல்வாக்கு போன்றவை அந்த மிரட்டல்களுள் அடங்கும்.

"நமது அரசியல் சூழலில் ஈடுபாடு கொண்டிருக்கும் அமைப்புகளின் தலைமைத்துவத்தில் வெளிநாட்டினரின் பங்கேற்பைக் கட்டுப்படுத்தும் நடைமுறையையும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கலாம்," என்றார் அவர்.

"குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நடத்தப்படும் பொதுக் கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் வெளிநாட்டினரின் பங்கேற்புக்கு நாம் நிலைநாட்டும் கொள்கையைப் போன்றது இது," என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரிலும் உலகிலும் நிகழ்ந்துள்ள வெளிநாட்டுத் தலையீடுகளின் பல உதாரணங்களைத் தனது 45 நிமிட உரையின்போது திரு சண்முகம் விவரித்தார். இதில் 2016ஆம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தலும் உள்ளடங்கியது. இந்நிலையில், தலையெடுத்துவரும் இந்த மிரட்டலைக் கையாளுவதற்கு சிங்கப்பூர் புதிய சட்டங்களை இயற்றுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். இதே கருத்தை, முன்னதாக இவ்வாண்டு அவர் நாடாளுமன்றத்திலும் விவரித்திருந்தார்.