சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தேர்தல் தலையீட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளை அமலாக்கியது ஃபேஸ்புக்

சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தேர்தல் தலையீட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளை அமலாக்கியது ஃபேஸ்புக்

2 mins read
2fe7b268-ee2e-48fb-920f-6cc9085b25a5
சிங்கப்பூர் பொது தேர்தலில் வாக்காளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (கோப்புப் படம்) -

சிங்கப்பூரிலுள்ள தனது ஊடகத் தளங்களில் சமூக-அரசியல் விளம்பரங்களின் வெளிப்படைத்தன்மையைக் கூட்டும் புதிய நடவடிக்கைகளை ஃபேஸ்புக் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) அறிமுகப்படுத்தியது.

பொதுத் தேர்தலுக்கான முதல்கட்ட நடவடிக்கையாக, தற்போதைய தொகுதி எல்லைகளை மறுஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் துறை அறிவித்து ஒரு மாதத்திற்குள் ஃபேஸ்புக் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புதிய நடவடிக்கைகளில் ஒன்றாக, சிங்கப்பூரில் சமூக விவகாரங்கள், தேர்தல் அல்லது அரசியல் தொடர்பான விளம்பரங்களை ஃபேஸ்புக்கில் அல்லது இன்ஸ்டாகிராமில் வெளியிட விரும்பும் தனிநபர் அல்லது அமைப்பு, அடையாள அட்டை அல்லது கடப்பிதழ் போன்ற பத்திரங்களைப் பயன்படுத்தி தங்களது அடையாளத்தையும், தாங்கள் சிங்கப்பூரில்தான் இருக்கிறோம் என்பதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

விளம்பரத்திற்கு யார் பொறுப்பு என்பதையும் அவர்கள் வெளியிடவேண்டும். அதோடு, தங்களது பெயர் அல்லது தங்களது அமைப்பின் பெயர் அல்லது இத்தகைய விளம்பரங்களுக்கான "பணம் செலுத்தியவர்" பொறுப்புத்துறப்பு அறிவிப்புக்காகத் தாங்கள் நடத்தும் ஃபேஸ்புக் பக்கம் ஆகிய விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவேண்டும். பொறுப்புத்துறப்பு அறிவிப்பில் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி அல்லது இணையத்தளம் போன்ற தொடர்பு விவரங்களும் இடம்பெற்றாகவேண்டும்.

"இந்த நிபந்தனைகளுடன், ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் வெளியிடும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள்," என்று ஃபேஸ்புக்கின் உலகளாவியத் தேர்தலுக்கான பொதுக்கொள்கை இயக்குநர் கேட்டி ஹர்பத் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டார்.

குடிமை மற்றும் சமூக உரிமைகள், குடிநுழைவு, குற்றச்செயல், அரசியல் விழுமியங்கள் மற்றும் ஆளுமை போன்ற சில சமூக விவகாரங்கள் சார்ந்த விளம்பரங்களை வெளியிட விரும்புவோருக்கும் புதிய நிபந்தனைகள் பொருந்தும்.