கொசு இனப்பெருக்கப் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றில் கிட்டத்தட்ட 230 பகுதிகள் கடந்த மாதம் அழிக்கப்பட்டும், டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 12,000ஐத் தாண்டுவதைத் தடுக்க முடியவில்லை.
இம்மாதம் 21ஆம் தேதி வரை மொத்தம் 12,108 டெங்கி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இது கடந்த மாதம் 24ஆம் தேதி எண்ணிக்கையான 10,748ஐ விட 1,360 சம்பவங்கள் அதிகம். இது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், டெங்கி சம்பவங் களின் வாராந்திர எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தது. இம்மாதத் தின் மூன்றாவது வாரத்தில் அது 303ஆக இருந்தது. இரண்டாவது வாரத்தில் அந்த எண்ணிக்கை 480 ஆக இருந்தது.
நேற்று முன்தினம் நிலவரப்படி, இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்த 1,183 கொசு இனப்பெருக்க இடங்களில் 1,092 இடங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து 14 நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட கொசு இனப்பெருக்கப் பகுதியிலிருந்து எந்தவொரு டெங்கி சம்பவமும் நிகழவில்லை என்றால் அந்தப் பகுதியில் கொசு இனப்பெருக்கம் அழிக்கப்பட்டு விட்டது என்று கருதப்படும்.
டெங்கி சம்பவங்கள் இன்னும் அதிகரித்த வண்ணம் இருக்கும் வேளையில் ஸிக்கா சம்பவங்களும் தலைதூக்க ஆரம்பித்து விட்டன.
ஆக, கொசு இனப்பெருக்கப் பகுதிகளை அழித்தொழிக்கும் பணியில் ஒருபோதும் பின்னடைவு இருக்காது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
"நாம் இன்னும் சிக்கலிலிருந்து மீண்டு வரவில்லை," என்று நேற்று கூறினார் வாரியத்தின் பொதுச் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் சியூ மிங் ஃபாய்.
"டெங்கி பருவத்தின் உச்சம் பொதுவாக ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். அதற்கு சாதகமாக வானிலையும் வெப்பமாக உள்ளது," என்று திரு சியூ மேலும் சொன்னார்.
தற்போது ஜாலான் யூனோஸில் ஆக அதிகமாக 127 சம்பவங்களும் அதற்கு அடுத்த நிலையில் சுவா சூ காங் அவென்யூ 2ல் 126 சம்ப வங்களும் நிகழ்ந்துள்ளன. இதைத் தவிர இம்மாதம் 8ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நான்கு ஸிக்கா சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

