26,000 பெட்டிகள், 840 பாக்கெட்டு களுக்கு மேலான வரி செலுத்தப் படாத சிக ரெட்டுகள் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகளால் இம்மாதம் 18ஆம், 19ஆம் தேதிகளில் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்பில் மொத்தம் 13 ஆடவர்கள், ஐந்து வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது.
இம்மாதம் 18ஆம் தேதி சுவா சூ கவாங் அவென்யூ 2லும் 3லும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இரு கனரக லாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் அவற்றில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் உள்ள பெட்டி களைக் கண்டனர். இதன் தொடர்பில் 31 வயது, 36 வயது ஆடவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 2,142 பெட்டிகள் கள்ள சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
அதேநாள் மாலையில் புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஒரு கிடங்கை சோதனையிட்டதில் 12,513 பெட்டிகள், 840 பாக்கெட் கள்ள சிகரெட்டுகள் சிக்கின. இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு மலேசியரும் மூன்று இந்தோனீசியர்களும் கைது செய்யப்பட்டனர்.
19ஆம் தேதி காம்பாஸ் கிரசென்டில் உள்ள மற்றொரு கிடங்கை சோதனையிட்டதில் 10,631 பெட்டிகள் வரி செலுத்தாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர் பில் ஆறு சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேநாள் மாலையில் உட்லண்ட்சில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கனரக லாரியைச் சோதனையிட்டதில் 1,428 பெட்டிகள் சிகரெட்டுகள் சிக்கின.
கைது செய்யப்பட்ட 13 ஆடவர்களில் எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எஞ்சிய ஐந்து ஆடவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

