ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் ஸ்கூட் விமான நிறுவனம், 'ஏர்ஏஷியா' நிறுவனத்தை ஓரந்தள்ளி 'ஆகச் சிறந்த மலிவுச்சேவை விமான நிறுவனம்' என்ற விருதைப் பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டில் ஸ்கூட் நிறுவனம் தொடங்கப்பட்டது. 'டிடிஜி டிராவல் அவார்ட்ஸ்' வழங்கும் இவ்விருதை ஸ்கூட் பெறுவது இதுவே முதல்முறை. இதுவரையில் மலேசியாவைச் சேர்ந்த 'ஏர்ஏஷியா', 2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்த விருதை ஏழு முறை வாங்கியுள்ளது.
ஸ்கூட்டின் உரிமையாளரான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 'ஆகச் சிறந்த முழுச்சேவை விமான நிறுவனம்' என்ற கௌரவத்தை இவ்வாண்டும் தக்கவைத்துள்ளது.
'டிடிஜி ஏஷியா' சஞ்சிகை வாசகர்களும் பயணத்துறை நிபுணர்களும் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
"இந்த விருதினைப் பெறுவதில் ஸ்கூட் குழுவினர் நன்றியுணர்வுடன் உள்ளனர். நாள்தோறும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை விஞ்சுவதில் உலகம் முழுவதும் விரிவடைந்துவரும் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்," என்று ஸ்கூட் தலைவர் லீ லிக் சிங் கூறினார்.

