பொருளியல் மந்தநிலை: தேவையானபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பொருளியல் மந்தநிலை: தேவையானபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

3 mins read
32c6f16d-fe86-4cf0-9def-f10acd93d3f7
படம்: தொடர்பு, தகவல், அமைச்சு -

நாட்டின் பொருளியல் நிலவரம் ஆண்டிறுதிக்குள் எவ்வாறு இருக்கும் என்பதை அணுக்கமாக அரசாங்கம் கவனித்து வருவதாகக் கூறிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தேவைப்படும்போது உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரின் உற்பத்தித் துறை ஆண்டு அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் 8% குறைந்திருப்பது குறித்து திரு ஹெங் இவ்வாறு கூறினார்.

மின்னணுவியல் மற்றும் துல்லியப் பொறியியல் துறைகள் வெகுவாகச் சரிந்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டின.

நேற்று 'சிஎன்ஏ938' வானொலிக்கு அளித்த பேட்டியில் இந்த விவரங்களை வெளியிட்ட திரு ஹெங், அமெரிக்க-சீன வர்த்தகப் பதற்றம் நிலவி வரும் வேளையில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி விகிதம் எதிர்நோக்கும் அபாயம் அதிகரித்தாலும், ஒருசில துறைகளின் நிலைமை நல்லவிதமாக இருப்பதாகக் கூறினார்.

மின்னணுவியல் துறைக்குள்ளேயே, தரவு சேமிப்பகம் உள்ளிட்ட சில பிரிவுகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அனைத்துலக பண நிதியம் உலக வளர்ச்சி விகித முன்னுரைப்பைப் பலமுறை குறைத்தபோதிலும், பொருளியல் சூழலைச் சமாளிக்கக்கூடிய பல்வேறு உபாயங்களை சிங்கப்பூர் அரசாங்கம் கைவசம் கொண்டிருப்பதாகத் திரு ஹெங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கு ஏற்ற நாணய மாற்று விகிதம் என்ன என்பதன் தொடர்பில் சிங்கப்பூர் நாணய ஆணையம் கவனமாக ஆராய்வதாகவும் நிதிக் கொள்கைகள் தொடர்பான வழக்கமான தனது அறிவிப்பில் ஆணையம் இது குறித்த தகவலை வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் சிறப்பு வரவு செலவுத் திட்டம் தேவையில்லை என்று கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், பொருளியல் சூழலுக்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளது என்றார்.

இந்த நடவடிக்கைகளுடன் முக்கியமான கட்டமைப்பு மாற்றமும் அவசியம் என்றார் திரு ஹெங். சீனாவை அதற்கு உதாரணமாக மேற்கோள் காட்டினார் அமைச்சர்.

தொழிலாளிகள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவி வருவதாகச் சொன்ன அவர், வேலைகளை மறுசீரமைக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம் என்றார்.

இது பலதரப்பட்ட அணுகுமுறையைக் குறிப்பிடுவதுடன் புதிய வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கத் தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார்.

தங்களது திறன்களை அறிந்து, விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொதுவான குறிக்கோளை அடைவதில் சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற திரு ஹெங், மாறாக, இனவாத, சமயவாத பரிமாணங்களில் அது இருக்குமானால் அது மிகவும் அபாயகரமானது என்றும் கூறினார்.

பொருளியல் மந்த நிலைக்கிடையே, 2021, 2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பொருள்சேவை வரி இரண்டு புள்ளிகள் அதிகரித்து 9 விழுக்காடாக உயர்த்தப்படுவது பற்றிய கேள்விக்கு, எதிர்காலச் சந்ததியினர் மீது நிதிச் சுமையை ஏற்றாமல் இருப்பதற்கு அந்த வரி உயர்வு அவசியம் என்றார் திரு ஹெங்.

பொருள்சேவை வரி உயர்வினால் ஏற்படும் விலை உயர்வைச் சமாளிக்க, வரி உயர்த்தப்படும்போது சிங்கப்பூரர்களுக்கு குறிப்பிடத்தக்க ஈட்டுத் தொகுப்பு அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.

நாம் ஒற்றுமையாக இருப்பதே நமது வெற்றிக்கான முக்கிய காரணம் என்று கூறிய திரு ஹெங், சிறிதும் பெரியதுமான விஷயங்களுக்காக நமது சமூகம் பிளவுபட்டால் நல்ல எதிர்காலம் அமைவது கடினம் என்று கூறினார்