ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட டான் ஹோங் ஷெங், 22, நீதிமன்ற விசாரணைக்கு வராததால் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
சதீஷ் நோவல் கோபிதாசை கொலை செய்ததாக ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் டான் ஹோங் ஷெங்கும் ஒருவர்.
நடாலி சியோவ் யூ ஷென், 23, லூ பூன் சோங், 25, டான் சென் யாங், 28, டான் யூன் ஷெங், சான் ஜியா ஸிங், ஆங் டா யூவான் ஆகியோர் மற்ற ஆறு பேர்.
வெள்ளிக்கிழமை அன்று கலவரத்தில் ஈடுபட்டதாக டான் ஹோங் ஷெங் மீது புதிய குற்றம் சுமத்தப் பட்டது.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்ட டான் நால்வருடன் சேர்ந்து டெஸ்மாண்ட் நியோ என்பவரைத் தாக்க சட்டவிரோதமாகக் கூடியதாகக் கூறப்படுகிறது.
மேகஸின் ரோட்டில் சென்டிரல் மாலில் உள்ள கிளப் சீக்ரெட்டுக்கு வெளியே அவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் தொடர்பான கைகலப்பு காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
நியோவும் இதேபோன்ற குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
இதற்கு முன்னர் ஆர்ச்சர்ட் ரோடு சம்பவத்தில் லூ, சான் ஆகியோருடன் சேர்ந்து டான் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கினர். இந்தக் குற்றச்சாட்டு பின்னர் பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதாக மாற்றப்பட்டது. இதில் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆர்ச்சர்ட் ரோடு கொலை வழக்கில் ஆகஸ்ட் 29ஆம் தேதி லூவும் சானும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். ஆனால் டான் ஹோங் ஷெங் வரவில்லை. இதனால் அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஜூைல மாதம் ஆர்ச்சர்ட் டவர்ஸில் உள்ள நாட்டி கேர்ல் கிளப்புக்கு வெளியே நடந்த கைகலப்பில் 31 வயது சதீஷ் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார். டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ் பின்னர் மரணமடைந்தார்.

