'எச்ஐவி' நோயால் பாதிக்கப்பட்டோரின் தகவல் தொகுப்பைத் திருடி அதன் மூலம் சிங்கப்பூர் அரசாங்கத்திடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்ட குற்றத்தைப் புரிந்த மிக்கி ஃபெரேரா புரோசெஸ் என்ற அமெரிக்கருக்கு நேற்று முன் தினம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி 22ஆம் தேதியன்றும் பிப்ரவரி 18ஆம் தேதியன்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இரு மின்னஞ்சல்கள் அனுப்பிய 34 வயது புரோசெஸ் குற்றவாளி என்று அமெரிக்காவின் கென்டக்கி நீதிமன்றம் இவ்வாண்டு ஜூன் மாதம் நிரூபித்தது.
மேலும் 'எச்ஐவி' நோயால் பீடிக்கப்பட்ட 14,000க்கு மேற்பட்டோரின் தகவல்களைச் சட்டத்துக்கு விரோதமாக வைத்திருந்த புரோசெஸின் குற்றமும் நிரூபண மானது.
ஆனால், அந்த மூன்று குற்ற சாட்டுகளையும் புரோசெஸ் மறுத்தார். குற்றங்களைப் புரிந்த அவர் பயன்படுத்திய மின்னணுவியல் சாதனங்களை அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கென்டக்கி நீதிமன்றம் உத்தர விட்டது. அவரது கூகல் இணையக் கணக்கும் முடக்கப்பட்டது.
அவரது மின்னணுவியல் சாத னங்கள் கைப்பற்றப்பட்டாலும் தான் திருடிய தரவுகளை புரோசெஸ் வேறு எங்காவது பதுக்கி வைத்திருக்கிறாரா என்று கண்டுபிடிக்க சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் உதவியை நாடி உள்ளது.
சிங்கப்பூரில் வாழும் 'எச்ஐவி' நோயால் பீடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் தகவலுடன் அதே நோயால் பாதிக்கப்பட்ட 50 அமெரிக்கர்களின் தகவல்களையும் புரோசெஸ், அமெரிக்காவில் உள்ள அவரது தாயாருக்கு அனுப்பினார்.
போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காக சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு 2018ல் அமெரிக்காவுக்குத் திரும்பிய புரோசெஸ், இவ்வாண்டு ஜனவரியில் அத்தகவலை வெளியிடப் போவதாக சிங்கப்பூரை மிரட்டினார்.
இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு புரோசெஸ் மூன்று ஆண்டுகளுக்குக் கண் காணிக்கப்படுவார். அப்போது அவர் முழுமையான மனநலச் சுகாதார ஆலோசனைக்கும் செல்ல வேண்டும்.

