சிங்கப்பூரின் வடகிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 3,000 பயனீட்டாளர்களின் அகண்ட அலைவரிசை இணைய சேவையில் ஏற்பட்ட தடங்கல் சுமார் 19 மணி நேரமாக நீடித்த பிறகு அச்சேவை இன்று காலை 11 மணிக்குள் வழக்க நிலைக்குத் திரும்பியது.
சம்பவத்தைத் தொடர்ந்து ஆராய்வதாகவும் அதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் நெட்லிங்க் டிரஸ்ட் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பினருடன் இணைந்து பாதிக்கப்பட்ட சேவையை வழக்க நிலைக்குத் திருப்பிவிட நெட்லிங்க் குழுவினர் அணுக்கமாக உழைத்தனர். பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தனிநபர்களுக்கு மேலும் சந்தேகங்கள் இருந்தால் தங்களுக்கு இணையச் சேவையை வழங்கும் நிறுவனங்களிடம் கேட்கலாம்," என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
இயோ சூ காங் ரோட்டில் முன்றாம் தரப்பு குத்தகையாளர் கண்ணாடியிழைக் கம்பிகளைத் தவறுதலாக அறுத்ததை அடுத்து சேவைத்தடை குறித்து சனிக்கிழமை பிற்பகல் 4.14 மணிக்கு புகார்கள் செய்யப்பட்டது.

