எங்கர்வேல் சமூக மன்றத்தின் கழிவறையில் ஒரு பெண்ணை மறைவிலிருந்து காணொளி எடுத்த இளையரை அவரது தந்தையே போலிசாரிடம் ஒப்படைத்திருந்தார். கடந்த வியாழக்கிழமை, 16 வயது முகம்மது நூர் ஹைக்கல் ஷஸாலிக்கு பிரிக்கப்பட்ட 21 மாதகால நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சமூக மன்றத்தின் கழிவறைக்குச் செல்லவிருந்த அந்த 20 வயது பெண்ணை ஹைக்கல் பின்தொடர்ந்தார்.ஹைக்கல் தனது கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டு குறுவறைக்குள் இருந்த அந்தப் பெண்ணை வெளியிலிருந்து காணொளி எடுத்தார். அவ்வாறு செய்து கொண்டிருந்தபோது ஹைக்கலின் கை, குறுவறைக் கதவின்மீது பட்டது. அதன் சத்தத்தைக் கேட்ட அந்தப் பெண், உடனே கூச்சலிடத் தொடங்கினார். ஹைக்கல் பயத்தில் அந்த இடத்தைவிட்டுத் தப்பியோடினார்.
ஹைக்கல் அந்தக் கழிவறைக்குள் சென்று பிறகு வெளியேறியதைக் கண்காணிப்புக் கேமராக்கள் பதிவு செய்தன. ஹைக்கலின் படத்தை போலிசார் பின்னர் இணையத்தில் பதிவேற்றம் செய்து அவரைப் பற்றிய மேல் விவரங்களுக்கான வேண்டுகோளை விடுத்தனர்.இதனை அறிந்த ஹைக்கலின் தந்தை, செங்காங் அக்கம்பக்க போலிஸ் நிலையத்திற்கு மகனைக் கொண்டு சென்றார்.
இவ்வாண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி, ஹைக்கல் எங்கர்வேல் ரோட்டிலுள்ள பேரங்காடி ஒன்றிலிருந்து 'வோட்கா' மதுபான போத்தலைத் திருடினார்.
தண்டனையை விதித்த மாவட்ட நீதிபதி எடி தாம், ஹைக்கல் ஓராண்டுக்கு சிங்கப்பூர் சிறுவர் இல்லத்தில் தங்கி 160 மணி நேரம் சமூக சேவை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார். மகனைக் கண்டித்து நெறிப்படுத்துவதற்கான பயிற்சியை மேற்கொள்ளும்படி ஹைக்கலின் பெற்றோருக்கு நீதிபதி தாம் உத்தரவிட்டார்.

