சிங்கப்பூர்: வேலையிடங்களில் நேரும் மரணங்களின் எண்ணிக்கை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இவ்வாண்டின் முதல் பாதியில் குறைந்துள்ளன. ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் 17 ஊழியர்கள் வேலையிடத்தில் மரணமடைந்தனர். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 18 ஊழியர்களும், சென்ற ஆண்டின் இரண்டாம் பாதியில் 23 ஊழியர்களும் மரணமடைந்தனர்.
"எல்லா வேலையிடங்களின் மரண விகிதங்களையும் கண்காணிக்கும் நடைமுறை 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவே ஆகக் குறைவான வேலையிட மரணங்கள்," என்று மனிதவள அமைச்சும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றமும் திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அரையாண்டு புள்ளிவிவர அறிக்கை குறிப்பிட்டது.
இவ்வாண்டின் 17 மரணங்களில் ஏழு மரணங்கள் கட்டுமானத் தளங்களிலும், இரு மரணங்கள் உற்பத்தித்துறையிலும் நேர்ந்தன. உயரத்திலிருந்து விழுதல், போக்குவரத்து விபத்துகள், கட்டட அமைப்புகளும் சாதனங்களும் விழுதல் அல்லது ஒழுங்காகச் செயல்படத் தவறுதல் ஆகியனவே மரணத்திற்கான முக்கிய காரணங்களாக இருந்தன.
நான்கு ஊழியர்கள் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தனர். மேலும் நால்வர் போக்குவரத்து விபத்துகளில் உயிரிழந்தனர். மூன்றாவது முக்கிய காரணத்தினால் மூவர் உயிரிழந்தனர்.
வேலையிடக் காயங்கள் அதிகரிப்பு
வேலையிட மரணங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், காயமடைந்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் பாதியில் வேலையிடங்களில் 6,561 காயங்கள் ஏற்பட்டன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் நேர்ந்த 6,073 காயங்களைவிட இது அதிகம்.
வேலையிடத்தில் விழுதல், வழுக்குதல், தடுக்குதல் ஆகியனவே காயங்களுக்கான முக்கிய காரணங்களாக இருந்தன. இக்காரணங்களினால் இவ்வாண்டின் முதல் பாதியில் எலும்பு முறிவு போன்ற 87 பெரிய காயங்கள் ஏற்பட்டன. இது சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்பட்ட 111 பெரிய காயங்களைவிடக் குறைவு.
சிராய்ப்பு, சுளுக்கு போன்ற லேசான காயங்களின் எண்ணிக்கை 1,757 ஆக இருந்தது. இது சென்ற ஆண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட 1,630 லேசான காயங்களைவிட அதிகம்.
வேலையிடக் காயங்களுக்கான இரண்டாவது முக்கிய காரணம் இயந்திரங்கள். இவ்வாண்டின் முதல் பாதியில் இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட 41 பெரிய காயங்களும் 1,066 லேசான காயங்களும் ஏற்பட்டன. இது சென்ற ஆண்டின் 35 பெரிய காயங்களையும் 956 லேசான காயங்களையும்விட அதிகம்.
இந்நிலையில், வேலையினால் நேரும் நோய்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு முதல் பாதியின் 295லிருந்து இவ்வாண்டின் முதல் பாதியில் 263 ஆகக் குறைந்திருக்கிறது.
தசைக்கூடு கோளாறுகள், செவிப்புலன் இழப்பு, சரும நோய்கள் ஆகியனவே வேலையினால் நேர்ந்த மூன்று முக்கிய நோய்களாக இருந்தன.
கடுமையான காயமும் மரணமும் நேரக்கூடிய அபாயம் இருந்தபோதிலும் யாரும் காயமடையாத ஆபத்தான வேலையிடச் சம்பவங்களும் சென்ற ஆண்டு முதல் பாதியில் 10ல் இருந்து இவ்வாண்டின் முதல் பாதியில் எட்டாகக் குறைந்திருந்தன.
ஆபத்தான துறைகள்
வேலையிட மரணங்களும் பெரிய காயங்களும் ஆக அதிகமாக ஏற்பட்ட துறைகளில் கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, சரக்குக்கிடங்கு ஆகியன உள்ளடங்கும்.
தங்குமிடம் மற்றும் உணவுச் சேவைகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரம், நிபுணத்துவ சேவைகள் ஆகியவற்றிலும் வேலையிடக் காயங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
மனிதவள அமைச்சு இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 2,500 திடீர் சோதனைகளை நடத்தியிருக்கிறது. இந்நடவடிக்கைகளின்போது 4,300 வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அத்துமீறல்கள் கண்டறியப்பட்டு, 29 நிறுவனங்களுக்குச் சராசரியாக நான்கு வாரகால பணி நிறுத்த உத்தரவு விடுக்கப்பட்டது. அதோடு, 300 நிறுவனங்களுக்கு மொத்தம் $680,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வாண்டின் இரண்டாம் பாதியிலும் 2,500 திடீர் சோதனைகளை நடத்தத் திட்டமிடுவதாக அமைச்சு தெரிவித்தது. அதோடு, அடுத்த ஆண்டிலிருந்து நிறுவனங்களின் வேலையிடப் பாதுகாப்பு விவரங்களை வெளியிடத் தொடங்கப்போவதாகவும் அமைச்சு எச்சரித்தது.

