பயணப் பதிவு இணையத்தளங்களால் தவறாக வழிநடத்தப்படும் வாடிக்கையாளர்கள்

பயணப் பதிவு இணையத்தளங்களால் தவறாக வழிநடத்தப்படும் வாடிக்கையாளர்கள்

1 mins read
469fc4aa-c883-4a18-89ef-ec5ffaa38633
-

வெளிநாட்டுப் பயணப் பதிவு இணையத்தளங்களைப் பயன்படுத்தும் பயணிகள், தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான கட்டணத்தைச் செலுத்துகின்றனர். இத்தகைய இணையத்தளங்களின் வெளிப்படைத்தன்மையற்ற விளம்பர மற்றும் விலை நிர்ணய முறைகளால் அவர்கள் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூர் போட்டித்தன்மை மற்றும் பயனீட்டாளர் ஆணையம் தெரிவித்தது.

இணையப் பயணப்பதிவு துறை சார்ந்த ஒன்பது மாத ஆய்வின் முடிவுகளை வெளியிட்டபோது ஆணையம் இது குறித்த தனது அக்கறைகளை தெரிவித்தது. கடந்தாண்டு ஜூலை மாதத்திற்கும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இடையே நடத்தப்பட்ட அந்த ஆய்வில் பயணம் சார்ந்த 38 இணையத்தளங்களின் நடைமுறைகள் ஆராயப்பட்டன. அத்துடன், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட 750 பயணத்துறை உறுப்பினர்கள் இந்தக் கருத்தாய்வில் கலந்துகொண்டனர்.

விலைகளின் வெளிப்படையின்மையைச் சமாளிக்க ஆணையம் சில வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளது. பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டங்களின் மீறல் எப்போது நடைபெறுகிறது என்பதை அந்த வழிமுறைகள் தெளிவுப்படுத்தும். அத்துடன், விளம்பரம் செய்யப்பட்ட விலைகளும் அது தொடர்பான நடவடிக்கைகளும் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துகிறதா என்பதை ஆணையம் ஆராயும்போது அதற்கான காரணங்களையும் சூழல்களையும் அந்த வழிமுறைகள் விளக்கும்.

வழிமுறைகள் பற்றிய மேல் விவரங்கள் ஆணையத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விலை வெளிப்படைத்தன்மை குறித்து முன்மொழியப்படும் இந்த வழிமுறைகளைப் பற்றிய பொதுமக்களின் கருத்துகளை ஆணையம் அக்டோபர் 21ஆம் தேதி வரை நாடுகிறது.