தனிநபர் நடமாட்டச் சாதனத்தையும் சைக்கிளையும் பகிரும் உரிமத்தை எந்த நிறுவனத்துக்கு வழங்குவது என்பது குறித்து நிலப்போக்குவரவு ஆணையம் இன்னமும் முடிவு செய்யவில்லை. இதனால் இவ்வாண்டு இரண்டாவது முறையாக உரிமம் வழங்கும் முடிவு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் கூடுதல் நடைமுறைகள் பற்றி தனிநபர் நடமாட்டச் சாதனம் மற்றும் வாடகை நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக ஆணையம் தெரிவித்தது.
தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் வேகத்தையும் அது இருக்கும் இடத்தையும் கண்காணிக்க உள்ளூரில் தயாரிக்கப்படும் சாதனத்தை பயன்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
இதனால் வேகத்தைக் கண்காணிக்கும் சாதனம் மாற்ற முடியாதது என்பதையும் தனிநபர் நடமாட்ட சாதனம் இருக்கும் இடத்திற்கான தகவல்கள் துல்லிய மாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியிருக்கிறது என்று ஆணையம் குறிப்பிட்டது. கடந்த மே 31ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் பிஎம்டி பகிர்வுக்கு உரிமம் வழங்கும் முடிவை நிலப் போக்குவரவு ஆணையம் 2வது காலாண்டிலிருந்து 3வது காலாண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆணையத்தின் மற்றொரு ஒத்திவைப்பு வெளியாகியுள்ளது.

