இணையம் மூலம் சுற்றுப் பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்களில் சிலர் அதிக கட்டணத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். அத்தகைய இணையத்தளங்களில் பயணத்திற்குரிய கட்டணங்கள் வெளிப்படையாக குறிப்பிடப்படாமல் இருப்பதும் அவற்றின் சந்தைத் துறை நடைமுறைகளும் இதற்குக் காரணம் என்று போட்டித் திறன் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரில் செயல்படும் சுற்றுப்பயண இணைய முன்பதிவுத் துறையைப் பற்றி ஒன்பது மாத காலம் ஆய்வு நடத்திய சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் அந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.
இந்தத் தொழில்துறையிலும் இதற்கு அப்பாலும் கடைபிடிக்கப்படும் இத்தகைய நடைமுறைகளைச் சமாளிக்க இந்த ஆணையம் வழிகாட்டி நெறிமுறைகளை உத்தேசித்து வருகிறது.
பயனீட்டாளர்கள் எதிர்நோக்கும் எல்லா சேவை தொழில்களிலும் கட்டணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதன் தொடர்பில் அந்த வழிகாட்டி நெறிமுறைகள் அமைந்திருக்கும்.
பயனீட்டாளர்களுக்குத் தவறான வழிகாட்டும் கட்டணங்கள் தொடர்பான ஆணையத்தின் மதிப்பீட்டு அம்சங்களும் அதில் இருக்கும். பயனீட்டாளருக்குத் தவறான வழிகாட்டக்கூடிய நான்கு பொதுவான கட்டண முறைகள் பற்றியும் சந்தை நடைமுறைகள் பற்றியும் ஆணையம் விளக்கி இருக்கிறது.
பட்டுவாடா அல்லது பணம் செலுத்தும் நடைமுறையின்போது கட்டாயமான அல்லது விருப்பத்திற்குரிய கட்டணம் ஒன்றைச் சேர்க்கும் நடைமுறை; பயனீட்டாளருக்கு வழங்கீட்டாளர்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்து இருக்கும் கூடுதலான சேவைகளை கொள்முதல் ஏற்பாடு;
விற்பனை கட்டணம் அதன் அருகே அசல் கட்டணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தள்ளுபடி தருவதாக அறிவிக்கும் நடைமுறை; பயனீட்டாளரிடம் இந்த வாய்ப்பை நழுவவிட்டால் பிறகு கிடைக்காது என்ற ஓர் அவசரநிலையை உருவாக்கி விற்பனை செய்வது ஆகியவை அந்த நான்கு நடைமுறைகள்.

