ஏராள வாய்ப்புடன் சிங்கப்பூர், யுரேஷிய ஒன்றிய உடன்பாடு

ஏராள வாய்ப்புடன் சிங்கப்பூர், யுரேஷிய ஒன்றிய உடன்பாடு

2 mins read

யுரேஷிய பொருளியல் ஒன்றியத்துடன் கூடிய புதிய தாராள உடன்பாடு மூலம் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஏராள பலன் கிடைக்கும் என்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.

அந்த உடன்பாடு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கும் என்று ஆர்மீனியாவில் அவர் கருத்துரைத்தார்.

புதிய தாராள உடன்பாடு, 180 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை உள்ளடக்குகிறது. மொத்தம் US$1.9 டிரிலியன் (S$2.6 டிரிலியன்) உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட ஆர்மீனியா, பெலாருஷ், கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா ஆகியவற்றைத் தழுவியதாக அந்த உடன்பாடு இருக்கிறது.

புதிய உடன்பாடு காரணமாக யுரேஷிய பொருளியல் ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் சிங்கப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் 90 விழுக்காட்டு பொருட்களுக்கு தீர்வையைக் குறைக்கும் என்றும் இந்த அளவு 10 ஆண்டுகளில் 97 விழுக்காடாக உயரும் என்றும் டாக்டர் கோ குறிப்பிட்டார். சிங்கப்பூரும் யுரேஷிய ஒன்றியமும் இன்று பல உடன்பாடுகளில் கையெழுத்திடுகின்றன.

ஆர்மீனியாவுக்கு நான்கு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் அந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்படும்.

திரு லீ, சனிக்கிழமை ஆர்மீனியா சென்றார். அந்த நாட்டின் பிரதமரையும் அதிபரையும் திரு லீ சந்தித்தார்.

பிரதமர் திரு லீ, ஆர்மீனியாவில் உச்ச கத்தோலிக்க சமயத் தலைவரைச் சந்தித்தார்.

சிங்கப்பூரில் உள்ள ஆர்மீனிய சமூகத்துக்கு பல ஆண்டு காலமாக சிங்கப்பூர் ஆதரவு அளித்து வருவதற்காக அந்தச் சமயத் தலைவர் திரு லீக்கு நன்றி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருக்கும் ஆர்மீனிய தேவாலயம் 1973 முதல் தேசிய நினைவுச் சின்னமாக திகழ்கிறது. இதற்காகவும் ஆர்மீனிய சமயத் தலைவர் பிரதமருக்கு நன்றி கூறினார். சிங்கப்பூரில் ஆர்மீனிய சமூகத்தினர் ஆற்றியுள்ள பல தொண்டுகளை சமயத் தலைவ

ரிடம் திரு லீ விளக்கிக் கூறினார்.

சமயங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் சமய நல்லிணக்கத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்தும் பற்றி இருவரும் பேசினர்.