தேசிய சேவையாற்றும் இளம் ஆடவர்கள், சிங்கப்பூரின் பாதுகாப்புப்பாக மெய்வருத்தி பயிற்சிபெறும் அனுபவத்தைச் சிறிதளவில் பெற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தாங்களாகவே முன்வந்து பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவ முகாமில் பங்கேற்றனர். அந்தப் பெண்களின் ஆதரவால் ஏற்பாட்டாளர்கள் வியப்படைந்ததாகத் தற்காப்பு மூத்த துணையமைச் சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் முகாமின் நிறைவு விழாவின்போது கூறினார்.
சிங்கப்பூருக்கு வலுவான தற்காப்பு தேவை என்பதையும் அதில் தேசிய சேவை வகித்துள்ள முக்கியத்துவத்தையும் இதுபோன்ற திட்டங்கள் பெண்களுக்கு உணர்த்த உதவுவதாக அவர் தெரிவித்தார். பெண்களுக்கான இந்தப் பயிற்சி முகாம் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியும் 8ஆம் தேதியும் மாஜூ ராணுவ முகாமில் நடைபெற்றது. ஆண்கள் மட்டும் கட்டாயமாக ஈராண்டுகளுக்குச் செய்யவேண்டிய தேசிய சேவை அனுபவத்தைப் பல்வேறு வயதுகளையும் பின்புலங்களையும் சேர்ந்த பெண்கள் பெற்றனர்.
'எஸ்ஏஆர்' துப்பாக்கிகளைக் கையாண்டதோடு, இரண்டு கிலோமீட்டர் சாலை அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை களில் ஈடுபட்டனர் அந்தப் பெண்கள். பயிற்சி முகாமில் பங்கேற்றதால் சிங்கப்பூரின் மீது தாம் கொண்டு உள்ள பெருமையும் பற்றும் அதிகரித்திருப்பதாகப் பங்கேற்பாளர்களில் ஒருவரான பிரேனா யாதவ் தமிழ் முரசிடம் தெரிவித்தார். இந்த முகாமை முழுமையாக நிறைவு செய்யத் தேவைப்படும் உடல்வலிமையும் மனவலிமையும் தம்மிடம் உள்ளதா என நினைத்து ஆரம்பத்தில் தன்னைத்தானே சந்தேகித்ததாக 39 வயது திருவாட்டி யாதவ் கூறினார்.
ஆயினும், முகாம் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவால் தாமும் சக பங்கேற்பாளர்களும் ஊக்கமடைந்ததாக அவர் கூறுகிறார். பங்கேற்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதைப் பயிற்றுவிப்பாளர்கள் எந்நேரமும் உறுதி செய்து கொண்டிருந்ததாகத் திருவாட்டி யாதவ் சொன்னார்.அத்துடன், இந்த முகாமின்வழி தாம் இன்னும் சுயேட்சையுடன் நடந்துகொள்ளவும் தமது சொந்த வளர்ச்சியின்மீது கவனம் செலுத்தவும் கற்றுக்கொண்டதாகத் திருவாட்டி யாதவ் தெரிவித்தார்.
தமது கணவர் கடந்தாண்டு சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேர்ந்ததைக் கண்டு தேசிய சேவையின் மீது ஆர்வம் கொண்டதாகவும், இந்த முகாமிற்குப் பிறகு அந்த ஆர்வம் பல்மடங்கு கூடியதாகவும் திருவாட்டி யாதவ் சொன்னார். 'அக்கார்ட்' எனப்படும் தற்காப்பில் சமூக உறவுகளுக்கான ஆலோசனை மன்றமும் அங் மோ கியோ பெண்கள் செயற்குழுவும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஆதரவுடன் இரண்டாவது ஆண்டாக இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்தன.
முகாமிற்குப் பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத் திருப்பதாக அங் மோ கியோ பெண்கள் செயற்குழுவின் தலைவர் ஜொவென்னா போர்ட்டிலா தெரிவித்தார்.
"சிங்கப்பூரின் தற்காப்பிற்குப் பங்களிப்பதும் அதற்கு ஆதரவு தருவதும் எப்படி என்பதைப் புரிந்துகொள்ள பெண்கள் முனைப்புடன் நடவடிக்கை எடுப்பதைக் கண்டு அகமகிழ்கிறோம்," என்று திருவாட்டி போர்ட்டிலா கூறினார்.
இந்த முகாமில் கலந்து கலந்துகொள்ள மற்ற பெண்களையும் ஊக்குவிப்பதாக திருவாட்டி யாதவ் தெரிவித்தார்.
"இந்த முகாமில் கலந்துகொள்ளும் பெண்கள் இன்னும் சுதந்திரமாக செயல்பட ஊக்கம் பெறுவார்கள். அத்துடன், புதியவர்களுடன் உறவாடும் வாய்ப்பையும் அவர்கள் பெறுவர். ராணுவ வாழ்க்கை எப்படிப்பட்டது என்ற அனுபவத்தைப் பெறுவதற்கு இது உன்னத வாய்ப்பாக இருக்கும்," என்றார் அவர்.

