சிங்கப்பூரின் தண்ணீர் விநியோகம், போக்குவரத்து, மற்ற அத்தியாவசியத் துறைகள் ஆகியவற்றை முடக்கிவிடக்கூடிய இணையத் தாக்குதல்களிலிருந்து செயற்பாட்டுத் தொழில்நுட்ப முறைகளைப் பாதுகாக்கும் பெருந்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
திறனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கியும், பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தும், இத்தகைய இணையத் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பைப் பெருந்திட்டம் வலுப்படுத்தும்.
சன்டெக் சிட்டி கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நான்காவது சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தை நேற்று தொடங்கி வைத்த மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், செயற்பாட்டுத் தொழில்நுட்ப இணையப் பாதுகாப்புப் பெருந்திட்டத்தை அறிவித்தார். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கருவிகளும் கணினிகளும் கொண்ட அத்தியாவசியமான உள்கட்டமைப்புச் சேவைகளை இந்தச் செயற்பாட்டுத் தொழில்நுட்ப முறைகள் இயக்குகின்றன. தண்ணீர், எரிபொருள், போக்குவரத்து, ஊடகம் ஆகிய துறைகள் இதில் உள்ளடங்கும்.
தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, இன்றைய உலகம் எதிர்நோக்கும் ஆக முக்கியமான இணைய மிரட்டல்களில் செயற்பாட்டுத் தொழில்நுட்ப முறைகள் மீதான தாக்குதல்களும் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் தொழில்துறைப் பங்காளிகளும் உருவாக்கிய பெருந்திட்டம், செயற்பாட்டுத் தொழில்நுட்ப முறைகளை வலுப்படுத்த வழிகாட்டும் என்றும் திரு டியோ தெரிவித்தார். பெருந்திட்டத்தின்கீழ், குளோபல் ரிசிலியன்ஸ் ஃபெடரேஷன் எனும் மிரட்டல் உளவு மையத்துடன் ஒன்றிணைந்து, புதிய செயற்பாட்டுத் தொழில்நுட்ப இணையப்பாதுகாப்பு தகவல் பகிர்வு மற்றும் பகுப்பாய்வு நிலையம் அமைக்கப்படவுள்ளது. செயல்முறை தொழில்நுட்ப அமைப்புகளுக்கான செயல்முறை தொழில்நுட்பம் தொடர்பிலான நடைமுறைகளை இந்தப் பெருந் திட்டம் கொண்டிருக்கும்.
இதன் மூலம் அமைப்புகள் தங் கள் கொள்கைகளையும் செயற் பாடுகளையும் இணைய மிரட்டல் களிலிருந்து பாதுகாக்கும் வழிகளை வலுப்படுத்திக்கொள்ளலாம். இணைய மிரட்டல்களால் வரும் ஆபத்துகளைச் சமாளிக்க வெவ் வேறு நாடுகள், அமைப்புகள், துறைகள் ஆகியவற்றுக்கு இடையே அணுக்கமான ஒத்துழைப்பு அவ சியம் என்பதை தமது உரையில் வலியுறுத்தினார் மூத்த அமைச்சர்.
"இதில் சிரமங்கள் இருந்தாலும், அரசாங்கங்கள், தனியார் துறைகள் ஆகியவற்றுக்கிடையே அதிக கலந்துரையாடலும் ஒத்து ழைப்பும் இருக்குமேயானால், அதி நவீன இணைய மிரட்டல்களைச் சமாளிக்கும் வழிகளையும் நமது மின்னிலக்க முறைகளின் நம்பிக் கையையும் பலப்படுத்திகொள்ளலாம்," என்றும் திரு டியோ கூறி னார்.


