ஹோங் லிம் பூங்காவில் விளையாட்டுக் கையெறி குண்டு பொருத்தப்பட்ட பை ஒன்றை வேண்டுமென்றே விட்டுச்சென்ற ஓட்டுநருக்கு $4,500 அபராதம் விதிக்கப்பட்டது.
தமக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 59 வயது ஹோ ஹீ ஹியூ ஒப்புக்கொண்டார். ஹோங் லிம் பூங்காவில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க அவர் அந்தச் செயலில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது.
விளையாட்டுக் கையெறி குண்டு பொருத்தப்பட்ட பையை அவர் வேறோர் இடத்தில் கண்டெடுத்ததாகவும் அப்பையில் பல பழைய விளையாட்டுப் பொருட்கள் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதியன்று மாலை 4.30 மணி அளவில் கிளார்க் கீ எம்ஆர்டி நிலையத்தின் 'ஏ' வாசலுக்கு அருகே ஹோ சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது குறிப்பிட்ட இனத்துக்கு ஒதுக்கப்படும் அதிபர் வேட்பாளர் அணுகுமுறைக்கு எதிராக ஹோங் லிம் பூங்காவில் கிட்டத்தட்ட 800 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அருகில் இருந்த சக்கரநாற்காலி சரிவுப் பாதையை நோக்கி அந்தப் பையை ஹோ வீசி அவ்விடத்தைவிட்டுக் கிளம்பினார். அந்த பையைப் பார்த்த ஆடவர் ஒருவர் போலிசில் புகார் செய்தார்.
ஏறத்தாழ 15 நிமிடங்களுக்கு கிளார்க் கீ எம்ஆர்டி நிலையத்தின் 'ஏ' வாசல் மூடப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஹோ அடையாளம் காணப்பட்டு அதிகாரிகளால் மறுநாள் கைது செய்யப்பட்டார்.

