பதிவு செய்யப்பட்ட ஏறத்தாழ 2,000 அறநிறுவனங்கள் அவற்றின் வருடாந்திர சமர்ப்பிப்புகளை ஒருமுறை மட்டும் செய்ய ஏதுவாக புதிய 'ஒன் ஸ்டாப்' இணையவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அறநிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சேரிட்டி போர்ட்டல்' என்றழைக்கப்படும் புதிய இணையவாசலை கணக்கு வைப்பு, நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்துடனும் சங்கங்கள் பதிவகத்துடனும் இணைந்து அறநிறுவன ஆணையர் உருவாக்கியுள்ளது.
இந்தப் புதிய அணுகுமுறையால் அறநிறுவனங்களின் நிர்வாகச் செலவு குறையும் என்றும் குறிப்பாகச் சிறிய அறநிறுவனங்களின் நிதிச் சுமை குறையும் என்றும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
ஃபுராமா ரிவர்ஃபிரண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற அறநிறுவன நிர்வாக மாநாட்டில் புதிய இணையவாசல் பற்றி அறிவித்தார்.
அறநிறுவனங்களின் வருடாந்திர சமர்ப்பிப்பில் வருடாந்திரக் கணக்கு அறிக்கை, நிதி அறிக்கை, நிர்வாக மதிப்பீட்டுக்கான சரிபார்ப்பு ஆகியவை அடங்கும். இதற்கு முன்பு சட்ட அமைப்பைப் பொறுத்து அறநிறுவனங்கள் அவற்றின் வருடாந்திர சமர்ப்பிப்புகளை கணக்கு வைப்பு, நிறுவன ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் அற
நிறுவன ஆணையரிடம் அல்லது சங்கங்கள் பதிவகம் மற்றும் அறநிறுவன ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேசிய சமூகச் சேவை மன்றத்துடன் இணைந்து தரவுப் பகிர்வுத் திட்டம் ஒன்றை அறநிறுவன ஆணையர் அறிமுகம் செய்வதாக மாநாட்டில் திருவாட்டி ஃபூ தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய அறிமுகத் திட்டம், சமூக உண்டியல் அல்லது சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு வாரியம் வாயிலாக தேசிய சமூகச் சேவை மன்றத்திடமிருந்து நிதி பெறும் அறநிறுவனங்கள் புதிய இணையவாசல் மூலம் அவற்றின் நிதி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வகை செய்கிறது.

