மூன்றாம் உலகக் குடிமக்களைக் கொண்ட முதலாம் உலக நாடு சிங்கப்பூர்: டாமி கோ

மூன்றாம் உலகக் குடிமக்களைக் கொண்ட முதலாம் உலக நாடு சிங்கப்பூர்: டாமி கோ

3 mins read
ce659a9b-c35a-48b9-9ddd-3a96b81e84b0
பேராசிரியர் டாமி கோ. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூர் மூன்றாம் உலகக் குடிமக்களைக் கொண்ட முதலாம் உலக நாடாக இருப்பதாக அனுபவமிக்கத் தூதர் டாமி கோ வருத்தம் தெரிவித்திருக்கிறார். வளர்ச்சியடைந்த ஒரு நாட்டின் குடிமக்களுக்கு இருக்கவேண்டிய குடிமைநல உணர்வு பல சிங்கப்பூரர்களுக்கு இல்லை என்று அவர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) கூறினார்.

"நான் அரசாங்கத்தைவிட சிங்கப்பூரர்களையே அதிகமாகக் குறை கூறுவேன். நம் மக்களில் பலரும் சுற்றுப்புறத்தைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. நம் மக்களில் பலரும் சுயநலமாகவும் பரிவில்லாமலும் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் வாகனம் ஓட்டும் விதத்தைப் பார்த்தாலே தெரியும்," என்று பேராசிரியர் கோ சொன்னதைக் கேட்ட பார்வையாளர்கள் சிரித்தனர்.

கொள்கை ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த சிங்கப்பூர் இருநூற்றாண்டு நிறைவு மாநாட்டில் அவர் பேசினார். ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடத்தப்பட்ட மாநாடு, செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியரும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் ஆங்கில/மலாய்/தமிழ்ப் பிரிவின் தலைமை ஆசிரியருமான வாரன் ஃபர்னான்டஸ் வழிநடத்திய கலந்துரையாடல் அங்கத்தில், பேராசரியர் கோவும் புளூம்பர்க் நியூஸ் தலைமை ஆசிரியர் ஜான் மிக்லத்வேட்டும் சிங்கப்பூர் சமுதாயம் மேம்படவேண்டிய முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தனர்.

திறமைக்கு வெகுமதியளிக்கும் கொள்கையால் சிங்கப்பூரிலும் மற்ற தலைநகரங்களிலும் பிரச்சினைகள் உருவாகி இருப்பதாகத் திரு மிக்லத்வேட் சுட்டிக்காட்டினார். இத்தகைய நகரங்களில், "முன்னேறிச் செல்வதற்காகப் பைத்தியக்காரத்தனமாகப் பாடுபட்டு உழைக்கும் மக்கள் கூட்டம்" உருவாகிறது. இந்தக் கூட்டத்தினர் தங்களது பிள்ளைகளுக்காக ஏராளமான பணத்தையும் வளங்களையும் செலவிடுகின்றனர்.

"இது உங்கள் பிள்ளைகளுக்கு மிகவும் நல்லதாக இருந்தாலும், சமுதாயத்திலுள்ள மற்றவர்கள் உங்கள் நிலையை எட்டிப்பிடிப்பது சற்று கடினமாகிறது. நவீன நாடு எதிர்நோக்கும் முட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று," என்றார் அவர்.

சிங்கப்பூர் வறுமைக் கோட்டை நிர்ணயித்து, ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்தவேண்டும் என பேராசிரியர் கோ கோரிக்கை விடுத்தார். ஒரு நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளுக்கும் சாதாரண ஊழியர்களுக்கும் இடையில் பல சமயங்களில் பெருமளவு சம்பள வேறுபாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலாளித்துவத்திற்கு ஏதாவது மாற்று இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், சிங்கப்பூர் எப்படிப்பட்ட முதலாளித்துவத்தை விரும்புகிறது என்பதே சரியான கேள்வியாக இருக்கும் என்றார் பேராசிரியர் கோ. அறநெறிகளைக் கடைப்பிடிக்கும் முதலாளித்துவத்தில், நிறுவனங்கள் தங்களது பங்குதாரர்களிடம் மட்டுமன்றி பரந்த சமுதாயத்திடமும் பொறுப்புடன் நடந்து கொள்ளும். இத்தகைய நிறுவனங்கள் சுற்றுப்புறத்தின்மீது அக்கறை கொள்ளும், ஊழியர்களை நன்றாகக் கவனித்துக்கொள்ளும், பாலினச் சமத்துவத்தையும் பன்மயத்தையும் ஆதரிக்கும் என்றார் அவர்.

சிங்கப்பூரர்களுக்காகத் தாம் பல யோசனைகளை வகுத்திருப்பதாகவும், அவைபற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு எழுதும் கட்டுரைகளில் விவரிக்கப்போவதாகவும் பேராசிரியர் கோ தெரிவித்தார்.

"நான் சிங்கப்பூரை நேசிக்கிறேன். சிங்கப்பூருக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால், நாம் வழுவற்ற மக்களா? இல்லை," என்றார் அடுத்த மாதம் 82 வயதை எட்டும் பேராசிரியர் கோ.

"ஆனால், நம்மால் நம்மை எப்போதும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என நாம் நம்புகிறேன். எனவே, எனது எஞ்சிய ஆயுட்காலத்தில், சிங்கப்பூரை மேன்மேலும் மேம்பட்ட இடமாகவும், சிங்கப்பூரர்களை மேன்மேலும் மேம்பட்ட மக்களாகவும் உருவாக்குவதற்கு என் நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்," என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்