ஜோகூரின் இரு சோதனைச்சாவடிகளில் செவ்வாய்க்கிழமை நடப்புக்கு வரவிருந்த வாகன நுழைவு அனுமதி முறை (VEP) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அதில் காணப்பட்ட சில பிரச்சினைகளால் அது நிறுத்தி வைக்கப்படுவதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது.
உச்சநேரங்களிலும் மற்ற நேரங்களிலும் இந்நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார். முன்னதாக, ரேடியோ அலைவரிசை அடையாளத்தைப் (RFID) அனைத்து வெளிநாட்டு வாகன உரிமையாளர்களையும் இணையத்தில் பதிவுசெய்யுமாறு போக்குவரத்து அமைச்சு கேட்டுக்கொண்டிருந்தது.
பதிவு செய்ததும் வாகன நுழைவு அனுமதிக்கான ரேடியோ அலைவரிசை அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். வாகன உரிமையாளர்கள் வாகன நுழைவு அனுமதி உறுதிச் சீட்டு, சந்திப்பு நேர சீட்டு, கடவுச் சீட்டு நகல், அண்மைய காப்புறுதி நகல், நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கிய வாகன பதிவுப் பத்திரம் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த வாகன நுழைவு அனுமதி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவும் கார் திருட்டைத் தடுக்கவும் இந்த வாகன நுழைவு அனுமதி அடையாள அட்டை 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இவ்வாண்டு அக்டோபர் முதல் தேதி இது நடப்புக்கு வரும் என்று ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அனுமதி அட்டை முறை நடப்புக்கு வந்ததும், வாகன நுழைவு அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே மலேசியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

