இணையப் பாதுகாப்பு மிரட்டலை எதிர்த்துப் போராட சிங்கப்பூரில் புதிய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆசியான் நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து இணையப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் இந்த நிலையம் பேருதவியாக இருக்கும்.
இணையப் பாதுகாப்பு மிரட்டலுக்கு எதிரான முயற்சிகளில் தற்போது ஆசியான் நாடுகள் ஒருங்கிணைந்து வலுவாகச் செயல்பட்டு வருகின்றன. அதே வேகத்தில் வட்டார அளவிலும் அனைத்துலக அளவிலும் இணையப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
"இணையத் தாக்குதல் எந்த நேரத்திலும் நடைபெறலாம். அதனால் ஏற்படும் விளைவுகள் மிகமோசமாக இருக்கும். "எல்லைகளைக் கடந்து கணினி கட்டமைப்புகள் முடக்கப்பட்டு பெருங்குழப்பத்துக்கு வழிவகுக்கும். இணையப் பாதுகாப்பை வலுப் படுத்துவதால் வட்டார அளவில் நம்பிக்கையை வலுப்படுத்த முடியும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
உன்னதத்துக்கான ஆசியான்-சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு நிலையம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்பத் திட்டங்களை வழங்கி கொள்கைகளை வகுக்க முப்பது மில்லியன் வெள்ளி செலவிடும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
வட்டார நாடுகளில் உள்ள தேசிய கணினி அவசரகால நடவடிக்கை குழுவுக்கு பயிற்சி அளிப்பது, நிபுணர்களிடையே தகவல்களை பகிர்ந்துகொள்வது ஆகிய வற்றைப் புதிய நிலையம் ஏற்று நடத்தும்.
4வது ஆசியான் இணையப் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் புதிய நிலையம் பற்றி அறிவித்த அமைச்சர் ஈஸ்வரன், அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டுக்குள் பிரதான பயிற்சி நிலையம் தயாராகிவிடும் என்றார்.
நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள சிட்டி ஹாலில் பயிற்சி நிலையம் அமையவிருக்கிறது. தனிப்பட்ட பயிற்சிகளை தொடங்க நிலையத்துடன் ஏற்கெனவே தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி கைகோத்துள்ளது என்று அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
இதற்கிடையே புதிய இணையப் பாதுகாப்பு நிலையத்தில் தலைசிறந்த இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை தெரிவித்தது.
ஆஸ்திரேலியா, கனடா, ஐேராப்பிய ஒன்றியம், ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக பங்காளிகளுடன் நிலையம் சேர்ந்து செயல்படும் என்றும் அது கூறியது.

