பல்வேறு குடும்பநல நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. அதிகாரம் வழங்குதல், குழந்தை பராமரிப்பு உரிமை போன்றவற்றுக்கு இனி மின்னிலக்க வழக்கு நிர்வாக முறையின் வழியாக எளிமையாகவும் அதிக செலவு இல்லாமலும் விண்ணப்பிக்கலாம்.
உதாரணமாக, 'iFAMS' எனும் ஒருங்கிணைக்கப்பட்ட குடும்ப விண்ணப்ப நிர்வாக முறையின் கீழ் மனநல ஆற்றல் சட்டத்தின்படி மிகவும் எளிமையாக விண்ணப்பிக் கலாம்.குடும்பநல நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டெப்பி ஓங் நேற்று நடைபெற்ற குடும்பநல கருத்தரங்கில் புதிய மனுத்தாக்கல் முறையை தொடங்கிவைத்தார்.
மனநல ஆற்றல் சட்டத்தின்கீழ் தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார். பெரும்பாலான சமயங்களில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் அவருக்கு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. இது போன்ற கோரிக்கைகளுக்கு புதிய முறையின் கீழ் எளிதாக விண்ணப்பத்தைத் தாக்கல் ெசய்யலாம்.
'iFAMS' எனும் அந்த இணையத் தளத்தில் மனநலம் குன்றியவருக்குப் பதிலாக அவரது நலன் கருதி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட அதிகாரங்களுக்கு குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கோரிக்கை விடுக்க முடியும். இதற்கான கட்டணம் 40 வெள்ளி மட்டுமே. இதற்கு முன்பு விண்ணப்பதாரர்கள், சைனாடவுன் பாயிண்டில் உச்ச நீதிமன்றக் கட்டடத்தில் இடம்பெற்றுள்ள கிரிம்சன்லாஜிக் சேவை நிலையத்துக்கு செல்ல வேண்டியிருந்தது.

