கட்டுப்பாட்டை இழந்து ஓடிய காரின் குறுக்கே தனது காரை நிறுத்தி பெரும் விபத்தைத் தவிர்த்த சிங்கப்பூரரான சாமெர்ஸ் சின்னுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அக்டோபர் முதல் தேதி புக்கிட் தீமா விரைவுச் சாலையில் காலை 8.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த கல்வி ஆலோசகர் சாமெர்ஸ் சின், தனக்கு முன்னால் கட்டுப்பாட்டை இழந்து அங்கு மிங்கும் ஓடிய கம்ஃபர்ட் டாக்சியை பார்த்து குழப்பமடைந்தார்.
டாக்சியின் எச்சரிக்கை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. முன் இருக்கையில் இருந்த பெண் ஒருவர், ஒட்டுநர் இருக்கையை எட்டி காரை திருப்ப முயற்சி செய்தார். பின் இருக்கையில் இருந்த மற்றொரு பெண் காரின் கதவைத் திறந்து உதவிக்கு கூச்ச லிட்டார்.
அப்போது சற்றும் தயங்காத 31 வயது சின், மெதுவாக சென்று கொண்டிருந்த டாக்சியின் பாதை யில் தனது காரை நிறுத்தினார்.
இதனால் டாக்சி அவரது காரின் பின்பக்கம் மோதி சாலை யோரம் நின்றது.
பின்னர் தனது காரிலிருந்து இறங்கி டாக்சி அருகே சென்று பார்த்த சின், அதில் இரண்டு பெண்களும் இரண்டு குழந்தை களும் இருப்பதைக் கண்டார்.
ஓட்டுநர் இருக்கையில் இருந்த டாக்சி ஓட்டுநர் மயங்கிக் கிடந்தார்.
அவருக்கு மாரடைப்பு ஏற் பட்டிருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இதற்கிடையே அங்கு வந்த மருத்துவ உதவியாளர்களும் மற்றொரு ஓட்டுநரும் டாக்சி ஓட்டுநரை வெளியே கொண்டு வந்தார். சுயநினைவை இழந்திருந்த 60 வயது டாக்சி ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்து விட்டார்.

