பணிப்பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு சிறை, அபராதம், பிரம்படி

பணிப்பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு சிறை, அபராதம், பிரம்படி

1 mins read

விமான நிலையத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் ஒருவர், தன்னுடைய வீட்டில் வேலை பார்த்த பணிப் பெண்ணை மானபங்கப்படுத்தியதற்காக அவருக்கு 11 மாதச் சிறைத் தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

குடும்பத்தினர் விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்தபோது ஸ்டான்லி செங் கிம் ஹான் வீட்டில் பணிபுரியும் 23 வயது மியன்மார் பணிப்பெண்ணின் தோளில் தலையைச் சாய்த்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. அடுத்த நாள், பின்பக்கத்திலிருந்து பணிப்பெண்ணை அவர் கட்டிப்பிடித்தார். மேலும் வலது கையால் பெண்ணின் மார்பகத்தை அவர் தொட்டார். பத்து நாள் நடந்த விசாரணைக்குப் பிறகு இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான செங் மீது சுமத்தப்பட்ட இரண்டு மானபங்க குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என ஆகஸ்ட் 7ஆம் தேதி மாவட்ட நீதிபதி எட்கர் பூ தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. செங்கின் முன்னைய வழக்கறிஞர் டி.எம். சின்னதுரை மாற்றப்பட்டு தற்போது கினோ ஹர்டியால் சிங் அவரைப் பிரதிநிதிக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் பணியாற்றி வரும் செங், மேல் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இருபதாயிரம் வெள்ளி பிணையில் செங் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவு காரணமாக பணிப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.