வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில் செப்டம்பரில் விற்பனையும் குறைந்தது. செப்டம்பரில் மொத்தம் 1,875 வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறின. இது, கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.9 விழுக்காடு குறைவு என்று எஸ்ஆர்எக்ஸ் சொத்து இணையத் தளம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டுக்கு முன்பு ஒப்பிடுகையில் கடந்த மாதம் மறுவிற்பனை வீடுகளின் விற்பனை 6.3 விழுக்காடு குறைவு. கடந்த மாதம் 39.6 விழுக்காடு நான்கு அறை மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன.
ஐந்து அறை வீடுகள் 24.9 விழுக்காடு விற்பனையாயின. மூவறை வீடுகள் 25.7 விழுக்காடும் எக்சிகியூட்டிவ் வீடுகள் 7.6 விழுக்காடும் விற்கப்பட்டன.ஆனால் மறுவிற்பனை வீடுகளின் விலை இவ்வாண்டின் 3வது காலாண்டில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் 3வது காலாண்டில் வீட்டு விலைகள் 0.1 விழுக்காடு குறைந்தது. இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து வீவக மறுவிற்பனை வீடு களின் விலை இறங்குமுகமாகவே இருந்துவருகிறது. 2013 ஏப்ரலில் கடைசியாக மறு விற்பனை வீட்டின் விலைகள் உச்சத்தில் இருந்தன. இதனுடன் ஒப்பிடுகையில் தற்போது 14.1 விழுக்காடு குறைந்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப் படையில் கட்டி முடிக்கப்படாத குடியிருப்புப் பேட்டைகளில் வீட்டு விலைகள் 0.9 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது. அதே சமயத்தில் கட்டி முடிக்கப்பட்ட பேட்டைகளில் விலை 1.2 விழுக்காடு குறைந்தது. கடந்த மாதம் பினாக்கிள்@டக்ஸ்டனில் உள்ள நான்கறை வீடு ஒன்று ஆக அதிகமாக ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டது.
பீஷானில் உள்ள 34 ஆண்டுகள் பழமையான எக்சிகியூட்டிவ் மேசனேட் வீடும் அதே விலைக்கு விற்கப்பட்டது. இந்நிலையில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வீவக வீட்டில் தங்கியிருக்கும் காலத்தை பூர்த்தி செய்யும் 2,107 வீடுகள் அடுத்த மூன்று மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எஸ்ஆர்எக்ஸ் தெரிவித்தது.

