மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற கார் ஓட்டுநர்

1 mins read
f750eeb1-1427-4688-8af9-e6ccc9849fd1
-

மத்திய விரைவுச்சாலையில் 'மிட்சுபிஷி' கார் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியபோதும் நிறுத்தாமல் தன்பாட்டுக்குச் சென்றது.

புதன்கிழமை (அக்டோபர் 2ஆம் தேதி) காலை நடந்த இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளியைத் தனது வாசகர்களிடமிருந்து பெற்றுள்ளதாக 'ஸ்டாம்ப்' செய்தித்தளம் இன்று தெரிவித்தது. மோல்மின் மேம்பாலச் சாலையில் இச்சம்பவம் நடந்ததாகவும் ஸ்டாம்ப் தெரிவித்தது.

அந்தச் சிவப்பு நிறக் கார் சாலையின் இடது தடத்திலிருந்து நடுத் தடத்திற்கு மாறிக்கொண்டிருந்தபோது பக்கத்தில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை இடித்ததை, 'ரோட்ஸ்.எஸ்ஜி' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி காட்டுகிறது. மோதப்பட்ட சைக்கிளும் அதன் ஓட்டுநரும் இடதுபக்கமாகச் சாய்ந்து தரையில் விழுந்தபோதும், அந்தக் கார் கண்டும் காணாமலும் இடது தடத்திற்கு மீண்டும் திரும்பி முன்னே சென்றது.

சாலையில் விழுந்துகிடந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு இளஞ்சிவப்பு சட்டை அணிந்த ஒரு முதியவர் உதவி செய்தது அந்தக் காணொளியில் பதிவானது.