இஸ்தானாவின் 150வது ஆண்டு விழா இந்த ஆண்டில் கொண்டாடப்படுகிறது. அதைக் குறிக்கும் வகையில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறார் புத்தகங்களை நேற்று வெளியிட்டார்.
'இஸ்தானா பொது வரவேற்பு துணிகரச்செயல்கள்' என்ற பொது தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டு உள்ள 'இஸ்தானாவின் மறைந்து கிடக்கும் வரலாறு', 'இஸ்தானாவின் வாழும் நினைவுகள்', 'இஸ்தானாவின் ரீங்கார ஒலிகள்' என்ற மூன்று புத்தகங்கள் நான்கு பிள்ளைகளின் மூலம் இஸ்தானாவின் வரலாற்றையும் பல நிலவரங்களையும் எடுத்துக் கூறுகின்றன.
கிரீன்வுட் தொடக்கப்பள்ளியில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அதிபர் அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் மூன்று புத்தகங்களை வழங்கினார்.
அப்புத்தகங்களை அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் பிரதமர் அலுவலகம் நன்கொடையாகத் தரும். அவற்றை முக்கியமான புத்தகக் கடைகளில் அக்டோபர் 11 முதல் $15 விலைக்கு வாங்கலாம். இத்தொகை அதிபர் சவால் நிதிக்கு வழங்கப்படும்.
அந்த நிகழ்ச்சியில் கிரின்வுட் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 37 மாணவர்களுடன் அதிபர் பேசி மகிழ்ந்தார். மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
இஸ்தானாவில் பூச்சிகள் உண்டா என்று ஒரு பையன் கேட்டான். அதற்குப் பதிலளித்த அதிபர், ஏராளமான சிற்றினங்களும் வண்ணத்துப் பூச்சிகளும் பறவைகளும் அங்கு உண்டு என்றார்.
வேறு ஒரு மாணவன் இஸ்தானாவில் எத்தனை அறைகள் இருக்கின்றன என்று கேட்டான். அதற்கு உடனடியாக பதிலளிக்க இயலாத அதிபர், தன் ஊழியரின் உதவியை நாடினார்.
எல்லோரிடத்திலும் கருணையுடன் நடந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு அதிபர் அறிவுரை கூறினார்.

