எரிசக்தி சிக்கனம்: புதிய நிலையம் உதயம்

எரிசக்தி சிக்கனம்: புதிய நிலையம் உதயம்

2 mins read
5b8d6112-8da6-4a3a-9067-752d1599241d
எரிசக்தி சிக்கனத் திட்டங்கள் தொடர்பிலான பயிற்சி பெறும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் பொறியியல் துறை மாணவர்களில் சிலர். இடமிருந்து சூரியன் ராஜ், முகம்மது ஃபிர்டாஸ் பவ்ஸிலஸா, கிளாரபெல்லா சுய். படம்: லிம் யோஹுய், எஸ்டி -

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எரிசக்தியை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தக் கூடிய நிலையை எட்டுவதற்கு உதவும் ஒரு புதிய தொழில்நுட்ப நிலையம் இந்த ஆண்டு முடிவில் தொடங்கும் என்று சுற்றுப்புற மற்றும் நீர்வள அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளர் ஆல்பர்ட் சுவா தெரிவித்து இருக்கிறார்.

'எரிசக்தி சிக்கனத் தொழில்நுட்ப நிலையம்' என்று குறிப்பிடப்படும் அந்த நிலையம் $5 மில்லியன் செலவில் உருவாகிறது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எரிசக்தியை எந்த அளவுக்கு விவேகமாக பயன்படுத்துகின்றன என்பதை அந்தப் புதிய நிலையம் மதிப்பிடும்.

நிறுவனங்களின் எரிசக்தி செயல்திறனை மேலும் எப்படி எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பதை எடுத்துச் சொல்லி புதிய நிலையம் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும். அதோடு மட்டுமின்றி எரிசக்தி சிக்கன மதிப்பீட்டு தேர்ச்சிகளைப் போதிக்கும் ஒரு பயிற்சி இடமாகவும் புதிய நிலையம் திகழும்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் அமைந்திருக்கும் அந்த நிலையம், நிறுவனங்களுக்கு நடைமுறையில் உதவக்கூடிய எரிசக்தி சிக்கனத் திட்டங்கள் தொடர்பில் இந்தக் கழகத்தின் பொறியியல் துறை மாணவர்களுக்கும் இத்தொழில் துறை நிபுணத்துவர்களுக்கும் நேரடி அனுபவ பயிற்சிகளை வழங்கும்.

நிறுவனங்கள் எரிசக்தியை அநாவசியமாக விரயமாக்குவதைத் தடுப்பதற்கு உதவக்கூடிய ஒரு புதிய எரிசக்தி நிர்வாகத் தகவல் முறை மானியமும் தொடங்கப்படும். இதன் மூலம் நிறுவனங்கள் விரயமாகும் எரிசக்தியை வேகமாகவும் துல்லியமாகவும் மதிப்பிட்டு அவற்றைத் தடுக்கலாம். இந்த நிதி தேசிய சுற்றுப்புற வாரியத்தின் கீழ் ஏற்படுத்தப்படும்.

நிறுவனங்கள் தங்கள் எரிசக்தி செயல்திறனைக் கண்காணிக்கும் முறையை மின்னிலக்கமயமாக்குவதற்கு இந்த நிதியும் புதிய நிலையமும் உதவும்.

சிங்கப்பூர் அரசாங்கம் கரிமவாயு வெளியேற்றத்தைக் குறைக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. அந்த இலக்கு நிறைவேறுவதற்கு உதவியாக இந்தப் புதிய திட்டங்கள் இடம்பெறுகின்றன.

சிங்கப்பூர் உலகளவில் சிறிய நாடு என்றாலும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட முழு ஆதரவு அளிக்க சிங்கப்பூர் உறுதிபூண்டு இருக்கிறது என்று தேசிய எரிசக்தி ஆற்றல் மாநாடு 2019ஐ தொடங்கிவைத்து உரையாற்றிய திரு சுவா குறிப்பிட்டார்.

நேற்று தொடங்கிய அந்த இரண்டு நாள் மாநாட்டில் உள்ளூர் மற்றும் அனைத்துலக எரிசக்தி சிக்கனத் துறை நிபுணர்கள் சுமார் 400 பேர் பலவற்றையும் விவாதிக்கிறார்கள். புதிய தொழில்நுட்ப நிலையத்திற்குத் தேசிய சுற்றுப்புற ஆணையம் ஆதரவு அளிக்கிறது.

சிங்கப்பூரில் எரிசக்தி சிக்கன சுற்றுச்சூழல் முறை ஒன்றைப் பலப்படுத்துவதற்கு இடம்பெறும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் புதிய தொழில்நுட்ப நிலையம் அமைவதாக திரு சுவா குறிப்பிட்டார்.

நேற்றைய நிகழ்ச்சியில் ஒன்பது நிறுவனங்கள் அவற்றின் எரிசக்தி சிக்கன முயற்சிகளுக்காக அங்கீகரித்துப் பாராட்டப்பட்டன.