சிங்கப்பூர் பொருளியல் அநேகமாக இதுவரையில் மந்தத்தில் சிக்கவில்லை. என்றாலும் நிலவரங்களை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.
தேவைப்பட்டால் ஆதரவு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். புளூம்பர்க் தொலைகாட்சிக்கு நேற்று பேட்டியளித்த இரண்டாவது வர்த்தக மற்றும் கல்வி அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா, சிரமமான பொருளியல் நிலவரங்களும் பொருளியல் மந்தமும் நமக்குப் புதிதல்ல என்றார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெறும் வர்த்தகப் போர் காரணமாக சிங்கப்பூர் பல சிரமங்களை உணரத் தொடங்கி இருக்கிறது. 2019ல் பொருளியல் வளர்ச்சி ஏறக்குறைய பூஜ்ஜியம் நிலைக்கு இறங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் பொருளியல் இரண்டாவது காலாண்டில் 3.3 விழுக்காடு சுருங்கி இருக்கிறது.
மூன்றாவது காலாண்டு புள்ளிவிவரங்கள் இம்மாதம் வெளியிடப்படும். தேவை ஏற்படும் பட்சத்தில், அரசாங்கம் தலையிட வேண்டும் என்றால் ஆதரவு நடவடிக்கைகளுடன் அரசு களத்தில் குதிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
இரண்டாவது நிதி அமைச்சர் என்ற முறையில் கருத்துரைத்த திருவாட்டி இந்திராணி ராஜா, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கலாக இருக்கும் புதிய வரவுசெலவுத் திட்டம் உற்பத்தித் திறனையும் புத்தாக்கத்தையும் ஊக்குவிப்பதற்கு உதவுகின்ற மேலும் பல நடவடிக்கைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதோடு, நவீன தொழில்நுட்பங்களை ஊழியர்கள் கைக்கொள்ள உதவும் நடவடிக்கைகளும் அந்த வரவுசெலவுத் திட்டத்தில் இருக்கக்கூடும் என்றார் அவர்.
தேர்தல் பற்றி கருத்துரைத்த அவர், நிலைப்பாட்டை ஏற்படுத்தித் தருகின்ற, பொருளியலை வளர்க்கின்ற, வேலைகளில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துகின்ற, எதிர்காலத்திற்குரிய ஒரு நாட்டைப் பலப்படுத்துகின்ற ஓர் அரசாங்கம் சிங்கப்பூருக்குத் தேவை என்றார்.
பொருளியல் சரியில்லாத நிலையும் வேலை இழப்பும் வாக்காளர்களுக்குக் கவலை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் அவை எல்லாம் புற அம்சங்களின் காரணமாக ஏற்படுபவை என்றார் அமைச்சர்.
அத்தகைய நெருக்கடிகளைத் திறம்பட சமாளித்து மீண்டுவர தேவையானவற்றை அதிகாரிகள் செய்து இருக்கிறார்களா என்பதைச் சிங்கப்பூரர்கள் மதிப்பிட்டு பார்ப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹாங்காங், உள்கட்டமைப்பு வசதிகள், மீட்சித்திறன் போன்றவை பற்றியும் குமாரி இந்திராணி ராஜா பேட்டியில் கருத்துரைத்தார்.

