இரண்டு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த இளையருக்குச் சிறை

இரண்டு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த இளையருக்குச் சிறை

1 mins read
2ed9f56a-c2a9-4e25-b67a-1d47a9516357
-

தனது முன்னாள் காதலியையும் தூரத்து உறவினரையும் பாலியல் பலாத்காரம் செய்த இளையருக்கு ஆறாண்டு ஒன்பது மாதங்கள் இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முழு நேரமாக தேசிய சேவையாற்றும் அந்த 21 வயது குற்றவாளிக்கு ஆறு பிரம்படிகள் கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த இளையர் 17 வயதில் முதல் குற்றத்தைச் செய்ததாகவும், எந்த வருத்தமுமின்றி ஓராண்டுக்குப் பிறகு முதல் பெண்ணைவிட வயதில் குறைந்த சொந்தக்காரப் பெண்ணுக்கு எதிராக அதே குற்றத்தைச் செய்ததாகவும் தண்டனை அளித்த மாவட்ட நீதிபதி எடி தாம் குறிப்பிட்டார். அந்தக் குற்றச்செயல்களுக்கு இலக்கான இரு பெண்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.

குற்றவாளிக்குச் சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்படவேண்டும் எனக் கோரியிருந்த தற்காப்பு வழக்கறிஞர் திரு வீ பான் லீ, தண்டனைக்கு எதிராகத் தமது கட்சிக்காரர் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறினார்.

ஆனால், இந்த இளையரைப் பொறுத்தவரை சீர்திருத்தப் பயிற்சி போதாது என்று நீதிபதி தாம் கூறினார். குற்றவாளிக்கு மறுவாழ்வு அளிப்பதைவிட தண்டனை கொடுப்பதன் மூலமாக இந்தக் குற்றங்களைப் பிறர் செய்வதை முன்கூட்டியே தடுப்பது முக்கியம் என்ற அரசாங்க வழக்கறிஞரின் வாதத்தை ஏற்பதாக அவர் கூறினார்.

முதல் பாலியல் பலாத்காரம் 2015ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதியன்று நடந்தது. 2016ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அந்த இளையர் இரண்டாவது முறையாக பலாத்காரம் செய்தார்.