நீங்கள் பயணம் செய்யும் காரின் ஓட்டுநர் திடீரென மயக்கமடைந்தால் என்ன செய்வது? செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) காலை ஒரு டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்தபோது அவரது பயணிகள் இந்தச் சூழ்நிலையை எதிர்நோக்கினார்கள். அந்த கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சியின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண் பயணி, வாகனத்தைச் சரியான பாதையில் செலுத்த முயற்சி செய்தார். அதோடு, வாகனத்தின் அபாய விளக்குகளையும் எரியவிட்டார்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் பயணி, பின் கதவைத் திறந்து உதவி கேட்டு கைகாட்டினார். இவ்விருவரும் செய்தது சரியான செயல் என சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
அபாயத்தைப் பற்றி மற்ற வாகனமோட்டிகளை எச்சரிப்பது முக்கியம் என்றார் சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் திரு பெர்னார்ட் டே.
"மற்ற வாகனமோட்டிகள் காரைவிட்டு விலகி இருக்க அபாய விளக்குகளை எரியவிட்டு எச்சரிக்கவேண்டும். சன்னல்களைத் திறந்து உதவி கேட்க முயற்சி செய்யவேண்டும்," என்றார் திரு டே.
வாகனத்தின் எச்சரிக்கை ஒலியைப் பயன்படுத்துவதும் மற்ற வாகனமோட்டிகளின் கவனத்தை ஈர்க்க உதவும் என்றார் சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர் நிலையத்தின் பயிற்றுவிப்பு மேலாளர் திரு ஜெரார்ட் பெரேரா.
செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவத்தின்போது, டாக்சி அங்குமிங்கும் கண்டபடி நகர்வதைக் கவனித்தார் கல்வி ஆலோசகரான 31 வயது சல்மர்ஸ் சின். இவர் தீவு விரைவுச்சாலையின் புக்கிட் தீமா பகுதியில் காலை 8.30 மணியளவில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
கட்டுப்பாடிழந்த டாக்சியை நிறுத்துவதற்காக, திரு சின் தனது காரை அதற்கு முன்னால் ஓட்டிச்சென்று, டாக்சி அவரது காரின் பின்பகுதியை மோதச் செய்தார். டாக்சியின் முன் இருக்கை பயணி, கார்மீது மோதி டாக்சி நின்றபோது, அதனை சாலையோரத்திற்குத் திருப்பினார்.
திரு சின்னின் செயலால் டாக்சியில் இருந்த இரண்டு பெண்களும் இரண்டு சிறுவர்களும் கடுமையான விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
டாக்சியின் 60 வயது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. சுயநினைவில்லாமல் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், பிற்பாடு உயிரிழந்தார்.
முன்னதாக இவ்வாண்டு மார்ச் மாதம், எஸ்எம்ஆர்டி டாக்சி ஓட்டுநர் ஒருவர், கல்லீரலில் இருந்த கட்டி உடைந்ததால் மயக்கமடைந்த சம்பவம் நடந்தது. அப்போது, அவரது டாக்சி குயின்ஸ்டவுனில் பாதசாரிகள்மீது மோதியதில் 66 வயது பெண் உயிரிழந்ததோடு, ஓட்டுநரையும் சேர்த்து இருவர் காயமடைந்தனர். அதே மாதத்தில், கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சி ஓட்டுநர் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் ஓட்டிக்கொண்டிருந்தபோது சுயநினைவை இழந்து, நடுத்தடுப்பில் மோதினார்.
செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவத்தைப் பற்றி பேசிய திரு பெரேரா, "உங்களுக்கு வாகனம் ஓட்டத் தெரியாவிட்டாலும், சுயநினைவில்லாத ஓட்டுநரின் பாதத்தை வேகமுடுக்கி மிதியிலிருந்து நகர்த்த முயலலாம்," என்றார்.
"வாகனம் எந்த வேகத்தில் செல்கிறது என்பதைப் பொறுத்தே கைபிரேக்கை இழுப்பது பலனளிக்கும். வாகனம் வேகமாகச் சென்று கொண்டிருந்தால் கைபிரேக் வேலை செய்யாமல் போகலாம். வாகனம் மெதுவாகச் சென்று கொண்டிருந்தால், கைபிரேக்கை பலமுறை இழுத்துவிடலாம்," என அவர் யோசனை கூறினார்.
ஆனால், வாகனத்தின் பயணி பின் இருக்கையில் இருந்தால், இவ்வாறு செய்வதற்காக இருக்கை வாரைக் கழற்றிவிடக்கூடாது. ஏனெனில், வாகனம் மோதினால் அவருக்கு அதிக ஆபத்தாகிவிடும். வாகனத்தின் இயந்திரத்தைப் பயணியால் அடைக்க முடிந்தால், வாகனம் படிப்படியாக மெதுவடையும் என திரு டே கூறினார்.
இவை அனைத்திலும் மேலாக, சுயநினைவை இழந்த ஓட்டுநரின் வாகனத்திலுள்ள பயணிகள் நிதானமாக இருப்பதே ஆக முக்கியம் என்றார் அவர்.
"முடிந்தவரை நிதானமாக இருந்து, சுற்றுப்புறத்தைக் கவனிக்கவேண்டும். கார் எவ்வளவு வேகமாகச் செல்கிறது? வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாகச் செயல்படவேண்டும்," என்றார் திரு டே.

