கடந்த சில நாட்களாக புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் பூச்சித் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. அங்குள்ள பல புளோக்குகளில் பெருமளவிலான கறுப்புப் பூச்சிகள் திடீரென குவிந்து குடியிருப்பாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் பூச்சிகள் வீடுகளுக்குள் நுழையாமல் இருக்க சன்னல்களை மூடிவைத்திருக்கும்படி அப்பகுதியின் நகரமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, வீட்டிற்குள் ஒருசில விளக்குகளை மட்டும் தட்டிவிடும்படி கூறியுள்ளது. குடியிருப்பாளர்களின் மெத்தைகளிலும் மேசைகளிலும் அந்தப் பூச்சிகள் கிடந்ததாகவும் குடியிருப்பாளர்களின் தோலில் ஒட்டிக்கொள்வதாகவும் வான்பாவ் நாளிதழ் கூறியது. குடியிருப்பாளர்களின் உடல்களில் பூச்சிகள் ஊர்ந்து செல்லும்போதெல்லாம் அரிப்பு ஏற்படுவதாகவும் வான்பாவ் கூறியது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களைப் பாதித்த பூச்சிகளும் தற்போது பெருமளவில் காணப்படும் பூச்சிகளும் ஒரே வகையா என்று தெளிவாக தெரியவில்லை.
பொதுத் தாழ்வாரங்களில் உள்ள விளக்குகளின் வெளிச்சத்தைக் குறைக்க அவற்றின் மீது மஞ்சள் நிற தாட்கள் ஒட்டப்படுவதாக ஜூரோங்-கிளமென்டி நகரமன்றம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட புளோக்குகளுக்குச் சென்று பார்த்த புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை, பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதாகக் கூறினார்.

