போக்குவரத்து போலிஸ் அதிகாரி மீது தமது மசராட்டி காரை மோதி, காரை நிறுத்தாமல் அங்கிருந்து மிகவும் விரைவாக ஓட்டிச் சென்ற ஓட்டுநரை ஆடவர் ஒருவர் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளார். இந்த விபத்து 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி இரவு 9.20 மணி அளவில் பிடோக் ரெசர்வோர் சாலையில் நிகழ்ந்தது.
அந்த விபத்துக்குக் காரணமானவர் லீ செங் யாங் என்று வர்த்தகரான திரு யான் ஜுன்ஃபெங் சாட்சியம் அளித்தார். பிடோக் ரெசர்வோர் சாலையில் தமது நண்பர் ஓட்டிய மோட்டார் சைக்கிளில் தாம் பயணம் செய்துகொண்டிருந்தபோது வெள்ளை நிற மசராட்டியை போக்குவரத்து போலிசார் நிறுத்துவதைக் கண்டதாக திரு யான் கூறினார்.
அதையடுத்து, தமது கைபேசி மூலம் நடப்பதை திரு யான் பதிவு செய்தார். மெசராட்டி கார் ஓட்டுநர் வெளிவராமல் காரைத் திருப்பி அங்கிருந்து ஓட்டிச் சென்றார்.
போக்குவரத்து போலிஸ் அதிகாரி கைரூல் அன்வார் அப்துல் கஹார் மீது மோதி அந்த கார் அங்கிருந்து சென்றது. இதைக் கண்ட திரு யானின் நண்பர் மோட்டார் சைக்கிளில் அந்த மசராட்டி காரை விரட்டினார். அந்த கார் போக்குவரத்து விளக்குகளில் நிற்காமல் சில இடங்களில் போக்குவரத்துக்கு எதிர்திசையிலும் சென்றது.
ஒருகட்டத்தில் கார் நின்றபோது திரு யான் அதன் சன்னலைத் தட்டினார். ஆனால் காரை லீ தொடர்ந்து ஓட்டிச் சென்றதாகவும் அப்பர் சிராங்கூன் சாலை அருகில் வான் தோ அவென்யூவில் அது மாயமானதாகவும் திரு யான் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த மசராட்டி காரை தாம் ஓட்டவில்லை என்று லீ தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக ஏற்கெனவே இணையம் வழி சூதாட்டம், சட்டவிரோதமாகக் கடன் கொடுத்தல் ஆகியவை தொடர்பாக 59 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. விபத்து பற்றிய வழக்கு தொடர்கிறது.

